உப்பனாற்றில் இணைப்பு சாலைகள் இன்றி ‘அந்தரத்தில்’ நிற்கும் பால பணிகள்


உப்பனாற்றில் இணைப்பு சாலைகள் இன்றி ‘அந்தரத்தில்’ நிற்கும் பால பணிகள்
x
தினத்தந்தி 7 July 2021 5:21 PM IST (Updated: 7 July 2021 5:21 PM IST)
t-max-icont-min-icon

திருமுல்லைவாசல்- கீழமூவர்க்கரை இடையே உப்பனாற்றில் இணைப்பு சாலைகள் இன்றி பால பணிகள் அந்தரத்தில் நிற்பதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சீர்காழி,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு, புதுப்பட்டினம், மடவாமேடு, கொட்டாயமேடு, ஓளை கொட்டாயமேடு, தாண்டவன் குளம், கூழையார், தொடுவாய், திருமுல்லைவாசல் உள்ளிட்ட ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலில் இருந்து பிடித்து வரும் மீன்களை விற்பனைக்காக நாகப்பட்டினத்துக்கு விரைவாக கொண்டு செல்ல சாலை வசதி இல்லை.

பழையாறு, திருமுல்லைவாசல் ஆகிய இடங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் இருந்து சீர்காழி வந்து மீண்டும் நாகப்பட்டினத்துக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் திருமுல்லைவாசல்- கீழமூவர்க்கரை இடையே உள்ள உப்பனாற்றில் பாலம் கட்ட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி 10 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி மதிப்பீட்டில் திருமுல்லைவாசல் உப்பனாற்றில் பாலம் கட்டப்பட்டு, பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலைகள் அமைக்கப்படாமல் பால பணிகள் முடிவடையாமல் ‘அந்தரத்தில்’ நிற்கிறது.

பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை அமைக்கப்படாத காரணத்தால் தாங்கள் பிடிக்கும் மீன்களை சீர்காழிக்கு சென்று பின்னர் நாகப்பட்டினம் செல்ல வேண்டிய நிலை நீடிப்பதாக மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே திருமுல்லைவாசல் உப்பானற்றில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் இருபுறத்திலும் இணைப்பு சாலையை விரைவாக அமைக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு சாலை அமைத்தால், சீர்காழி செல்லாமல் நேரடியாக தரங்கம்பாடி வழியாக நாகப்பட்டினத்தை விரைவாக சென்றடைய முடியும் என்பது மீனவர்களின் பல ஆண்டு கால எதிர்பார்ப்பு.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘பழையாறு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பிடிக்கும் மீன்களை விரைவாக கொண்டுசென்று விற்பனை செய்ய வேண்டுமானால் திருமுல்லைவாசல் உப்பனாற்றில் கட்டப்பட்டுள்ள பாலத்துக்கு இணைப்பு சாலை அமைத்துத்தர வேண்டும். இணைப்பு சாலை இல்லாததால் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சீர்காழியை கடந்துதான் மீண்டும் நாகப்பட்டினத்துக்கு செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது. இதனால் கால விரயமும், பண விரயமும் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே அரசு உடனடியாக திருமுல்லைவாசல் உப்பனாற்றில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் இருபுறமும் இணைப்புச்சாலை அமைத்து தர வேண்டும்’ என்றனர்.

Next Story