சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்- வாலிபரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
சிப்காட் அருகே சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி அளித்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட வாலிபரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
சிப்காட் ,
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயலிங்கம் (வயது 23). தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவரும், வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்த மல்லிகா என்பவரும் காதலித்து 2 வருடங்களுக்கு முன்பு பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி மல்லிகா அவரது தாய் வீடான வாலாஜாபேட்டைக்கு சென்றுவிட்டார்.
அடுத்த நாள் 22-ந் தேதி விஜயலிங்கம் இறந்துவிட்டதாக, மல்லிகாவுக்கு தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து தனது கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக, மல்லிகா ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவிடம் புகார் அளித்தார். அதன்பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
இந்தநிலையில், நேற்று வாலாஜா மண்டல துணை தாசில்தார் விஜயசேகர், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான் சேவியர், பாலமுருகன், லோகநாதன் மற்றும் போலீசார் முன்னிலையில், கிருஷ்ணாபுரம் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட விஜயலிங்கத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
வேலூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஜீவன், மகேந்திரன் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் விஜயலிங்கத்தின் உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் விஜயலிங்கத்தின உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.
இதுகுறித்து சிப்காட் போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story