ஜோலார்பேட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா


ஜோலார்பேட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
x
தினத்தந்தி 7 July 2021 7:11 PM IST (Updated: 7 July 2021 7:11 PM IST)
t-max-icont-min-icon

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

கோரிக்கை மனு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் 90-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் நிலுவைத் தொகை மற்றும் நடப்பு ஆண்டிற்கான சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி ஆணையாளரிடம் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் அவர்கள் மனுமீது எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதனால் கடந்த மாதம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய ஆணையாளர் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்து இருந்தார்.

தர்ணா போராட்டம்

ஆனால் இதுவரை ஊதிய உயர்வு உள்ளிட்ட எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று காலை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், கலெக்டர் வந்த பின்னர் அவரிடம் மனுகொடுக்கலாம் என தெரிவித்தனர். 

ஆனால் அதனை ஏற்க மறுத்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலெக்டர் வரும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் என கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

பரபரப்பு

அப்போது உங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுங்கள் ஆணையாளரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். 5 பேர் மட்டும் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். மற்றவர்கள் கலைந்து செல்லுங்கள் என கூறினார். 
ஆநால் தொழிலாளர்கள் எங்களது கோரிக்கைக்கு முடிவு தெரியும் வரை நாங்கள் இங்கிருந்து செல்லமாட்டோம் என கூறி கலெக்டர் அலுவலகத்திலேயே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story