டீசல் விலையை சமாளிக்க ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வடிவமைத்த புதிய உழவு கருவி - விவசாயிகள் வரவேற்பு


டீசல் விலையை சமாளிக்க ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வடிவமைத்த புதிய உழவு கருவி - விவசாயிகள் வரவேற்பு
x
தினத்தந்தி 7 July 2021 7:59 PM IST (Updated: 7 July 2021 7:59 PM IST)
t-max-icont-min-icon

டீசல் விலையை சமாளிக்க ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் புதிய உழவு கருவியை வடிவமைத்து உள்ளார். இதற்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து உள்ளது.

திருக்காட்டுப்பள்ளி,

வேளாண்மையிலும் எந்திரங்கள் நுழைந்து உழவு செய்ய, நடவு நட, களை பறிக்க, அறுவடை செய்ய அனைத்து வேளாண் பணிகளுக்கும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வயல்களை உழுவதற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களுக்கு டீசல் அதிகம் தேவைப்படுகிறது. டீசல் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் இந்த சூழலில் விவசாய பணிகளுக்கு டிராக்டரை பயன்படுத்தும்போது விவசாயிகளுக்கு கூடுதல் செலவாகிறது.

டீசல் விலையை சமாளிக்க பழைய நடைமுறைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் வணிக வரித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற என்ஜினீயர் ஒருவர் மாடு பூட்டி உழவு செய்யும் ஒரு புதிய கருவியை வடிவமைத்து உள்ளார். இதை பரிசோதனை அடிப்படையில் பூதலூரில் விவசாயிகளின் வயல்களில் உழவு செய்து காண்பித்து வருகிறார். இதற்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது.

200 கிலோ எடை கொண்ட இந்த கருவியில் இரட்டை மாடுகள் பூட்டி உழவு செய்யலாம். ஆழ உழவு செய்ய, மேலாக உழவு செய்ய என மாற்றி அமைக்க கூடிய வகையில் 9 கூர்முனை உழவு கருவிகளை இதனுடன் இணைத்து வயல்களில் உழவு செய்ய முடியும்.

புதிய உழவு கருவியை வடிவமைத்து உள்ள ஓய்வு பெற்ற என்ஜினீயர் சுந்தரேசன் கூறியதாவது:- திருச்சி அருகே உள்ள துவாக்குடியில் தொழிற்பேட்டையில் ஒரு சிறு பட்டறை நடத்தி வருகிறேன். தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலையால் விவசாயிகளுக்கு ஏற்படும் அதிக செலவுகளை கருத்தில் கொண்டு, செலவை குறைக்கும் வகையில் மாடு பூட்டி உழவு செய்யும் கருவியை செய்வதில் ஆர்வம் காட்டினேன்.

பல ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு விதங்களில் முயற்சிகள் மேற்கொண்டு தற்போது புதிதாக கருவியை வடிவமைத்து இருக்கிறேன். மாடு பூட்டி உழவு செய்யும் கருவியில் பின்னால் உள்ள கலப்பை பகுதியை கழற்றி வைத்துவிடலாம். கலப்பையை அகற்றிவிட்டு மாட்டு வண்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு வண்டியை செய்வதற்கு ரூ.50 ஆயிரம் வரை செலவானது. நல்ல மாடுகளை வைத்து 8 மணி நேரத்தில் ஒரு ஏக்கர் உழவு செய்துவிடலாம். களைகளை அகற்றி, நடவு செய்வதற்கு ஏற்ற வகையில் வயலை தயார் செய்துவிட முடியும். தஞ்சை மாவட்டம் பூதலூர் விவசாயிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த கருவியை எடுத்து வந்து விவசாயிகள் மத்தியில் செயல் விளக்கம் செய்து காண்பித்து வருகிறேன். தற்போது 6 கருவிகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் இந்த கருவியை எளிமைப்படுத்தி செய்வது குறித்து ஆய்வு செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய கருவியை பரிசோதனை அடிப்படையில் வயல்களில் உழவு செய்ய பயன்படுத்திய பூதலூரை சேர்ந்த இளம் விவசாயிகள் சிலர் இந்த கருவியின் எடை இன்னும் குறைவாக இருந்தால் இன்னும் எளிதாக இருக்கும் என கூறினர். தினந்தோறும் உயர்ந்து வரும் டீசல் விலையை எண்ணிப் பார்க்கும் போது இது போன்ற புதிய கண்டுபிடிப்புகள் வரவேற்க கூடியவை என விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story