தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு-அமைச்சர் சேகர்பாபு பேட்டி


தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு-அமைச்சர் சேகர்பாபு பேட்டி
x
தினத்தந்தி 8 July 2021 12:57 AM IST (Updated: 8 July 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக குற்றாலத்தில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தென்காசி:
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக குற்றாலத்தில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கல்லூரியில் ஆய்வு

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று மாலை 4 மணிக்கு குற்றாலம் சுற்றுலா மாளிகைக்கு வந்தார். அங்கு தி.மு.க. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இயங்கும் குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி முதன்முறையாக ஆட்சி பொறுப்பேற்ற 47 நாட்களில் கவர்னர் உரையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் தெப்பம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் உள்பட தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கும் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

எந்தெந்த மாவட்டங்களில் இதுபோன்று கோவில்கள் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்து அந்தந்த மண்டலங்களில் உள்ள இணை ஆணையர்களை மதிப்பீடு செய்து அறிக்கை அனுப்ப ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்த மாத இறுதிக்குள் இதற்கான பட்டியல் தயார் செய்யப்படும்.
தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துக்களை மீட்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை 81 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

சாமி தரிசனம்

இதன்பிறகு அமைச்சர் சேகர் பாபு தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 
நிகழ்ச்சிகளில் கலெக்டர் கோபால சுந்தரராஜ், ராஜா எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன், வல்லம் ஓணம் பீடி உரிமையாளர் பாலகிருஷ்ணன், தென்காசி நகர தி.மு.க. செயலாளர் சாதிர், ஒன்றிய செயலாளர்கள் சீனி துரை, அழகு சுந்தரம், தென்காசி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை கூட்டுறவு சங்க தலைவர் ஷமீம் இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகள்

குற்றாலம் வந்த அமைச்சரிடம் பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் சங்கர சுப்பிரமணியன், காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசிமக திருவிழாவை ரதவீதிகளில் முந்தைய காலங்களில் நடைபெற்றது போல் நடத்தக்கோரி மனு கொடுத்தார்.
இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, காசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி மனு கொடுத்தார்.

ஆழ்வார்குறிச்சி

முன்னதாக கடையம் யூனியன் ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், “இக்கோவிலை உடனடியாக பராமரித்து குடமுழுக்கு நடத்திட சுமார் ரூ.7½ கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோவிலுக்கு சொந்தமான 9 சிலைகளில் 2 சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ளது. அது விரைவில் இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ஆய்வின் போது மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் துறை அதிகாரிகள், பக்தர்கள் உடனிருந்தனர்.
இதேபோல் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் அமைந்துள்ள சுமார் 1,100 வருடங்கள் பழமையான திருவாலீஸ்வரர் கோவிலில்  அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.

Next Story