நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர் விரைவில் சீரமைக்கப்படும்-அமைச்சர் சேகர்பாபு தகவல்
நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர் விரைவில் சீரமைக்கப்படும் என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறையில் எந்த பணிகளும் நடக்கவில்லை என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
நெல்லை:
நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர் விரைவில் சீரமைக்கப்படும் என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறையில் எந்த பணிகளும் நடக்கவில்லை என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
அமைச்சர் ஆய்வு
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோவில்களை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக நேற்று நெல்லை வந்த அவர் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயமான நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி, வசந்த மண்டபம், கோவில் உள்பிரகாரம், தெப்பக்குளம் ஆகியவற்றை பார்வையிட்டார். கோவில் யானை காந்திமதிக்கு பழங்கள் வழங்கி, ஆசீர்வாதம் பெற்றார்.
ஆக்கிரமிப்பு அகற்றப்படும்
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லையப்பர் கோவிலில் சிதலமடைந்து திருப்பணிகள் நடக்க இருக்கும் மண்டபத்தில் பணிகள் மேற்கொள்ள தொல்லியல் துறை அனுமதி கோரப்பட்டுள்ளது. இங்குள்ள கருமாரி தெப்பம் முழுமையாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். தெப்பக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
அதுபோன்று நவக்கிரக சந்திரன் சிலை சிதலமடைந்துள்ளது. அதனை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
வெள்ளித்தேர் சீரமைக்கப்படும்
நெல்லையப்பர் கோவிலில் உள்ள வெள்ளித்தேர் விரைவில் சீரமைக்கப்பட்டு தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் யானை காந்திமதிக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இது இனி 15 நாட்களுக்கு ஒருமுறை நடத்தப்படும். சுவாமி நெல்லையப்பருக்கு நடைபெற்று வந்த மூலிகைத்தைல காப்பு நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை உடனடியாக நடத்த அறநிலையத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் விரைவில் திறக்கப்படும். மேலும் கோவிலில் உள்ள மற்ற 3 வாசல்களின் கதவுகள் திறக்கப்படும். கோவிலுக்கு தேவையான பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சியில்...
தமிழக கோவில்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். அறநிலையத்துறையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இந்த துறை உள்ளது. இனி குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்துப்பணிகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டி.பி.எம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லட்சுமணன், நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன், ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாபநாசம் கோவில்
இதையடுத்து பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோவிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபுவை, கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். அங்கு சாமி தரிசனம் செய்த பின்பு பாபநாசம் படித்துறையை அமைச்சர் பார்வையிட்டார்.
அப்போது தாமிரபரணி நதியில் பக்தர்கள் களைந்து போடும் துணிகளை அப்புறப்படுத்த போதுமான நடவடிக்கை எடுக்கவும், பெண்கள் உடை மாற்றும் அறை, சுகாதார வளாக வசதிகள் மற்றும் கார் பார்க்கிங் செய்து கொடுக்கவும் உத்தரவிட்டார்.
பின்னர் கல்யாணதீர்த்தம் கோடிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அகஸ்தியர் அருவி
கோவிலுக்கு செல்லும் பாதைகளை சரிசெய்யவும், கோவிலில் சேதமடைந்தவற்றை சரிசெய்து அங்கு லோபமுத்ரா சமேத அகஸ்தியர் சிலையை பிரதிஷ்டை செய்வதுடன் கோவிலுக்கு குடமுழுக்கு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அகஸ்தியர் அருவியை பார்வையிட்டு அங்கு பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகங்களை பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் மற்றும் வனத்துறையினரிடம் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி, அம்பை தாசில்தார் வெற்றிச்செல்வி, இந்து அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன், இணை ஆணையாளர் செல்வராஜ், உதவி ஆணையாளர் ரத்தினவேல்பாண்டியன், பாபநாசம் கோவில் நிர்வாக அதிகாரி ஜெகநாதன், பாபநாசம் வனச்சரகர் பாரத் உள்பட அரசு அதிகாரிகள், தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story