தமிழகத்தில் கொரோனாவால் 3,686 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பேட்டி
தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்தது 3,686 குழந்தைகள் என கண்டறியப்பட்டுள்ளதாக மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தெரிவித்தார்.
திருச்சி,
தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்தது 3,686 குழந்தைகள் என கண்டறியப்பட்டுள்ளதாக மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டம்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த நிலையை அறியவும், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையக்குழு ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 20 துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் எஸ்.சிவராசு முன்னிலை வகித்தார். ஆணைய உறுப்பினர்கள் ராமராஜ், முரளிகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், திருச்சி மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் அனிதா உள்ளிட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
3-வது அலையில் குழந்தைகள் பாதிப்பு
கொரோனா 3-வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. அதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. குழந்தைகள் நாட்டின் எதிர்காலம் என்பதால் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். அப்போதுதான் நாளைய தேசத்தின் எதிர்காலம் வலிமையானதாக இருக்கும்.
குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த இணையவழி கல்வியில் உள்ள பிரச்சினைகள் களையப்பட வேண்டும். மேலும் பெற்றோர் தகுந்த அறிவுரை கூறி கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். கல்வி நிறுவனங்கள் கூடுதல் கட்டணங்கள் வசூலித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
3,686 குழந்தைகள் தவிப்பு
தமிழகத்தில் கொரோனாவினால் தாய்-தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 93. பெற்றோரில் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 3,593. மேலும் கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கொரோனா காலக்கட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் அனுமதி பெறாத குழந்தைகள் காப்பகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 21 பதிவு பெற்ற காப்பகங்கள் உள்ளன. 17 காப்பகங்களில் 218 குழந்தைகள் இருக்கிறார்கள். காப்பகங்களில் குழந்தைகள் சரியாக பராமரிக்கப்படுகிறார்களா? என ஆய்வு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
100 படுக்கை வசதி
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பேசுகையில், "3-வது அலைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கென 100 படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வைத்துள்ளோம். குழந்தைகளுக்கான தனிப்பிரிவு அமைக்க அரசு முடிவு எடுத்துள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான படுக்கை வசதிகளை அதிகரிக்க அறிவுறுத்தி உள்ளோம்" என்றார்.
Related Tags :
Next Story