பொதுமக்கள் தவறவிடும் ‘வைபை’ ஏ.டி.எம். கார்டுகளை திருடி வங்கி கணக்கில் பணம் எடுத்து மோசடி


பொதுமக்கள் தவறவிடும் ‘வைபை’ ஏ.டி.எம். கார்டுகளை திருடி வங்கி கணக்கில் பணம் எடுத்து மோசடி
x
தினத்தந்தி 8 July 2021 10:43 AM IST (Updated: 8 July 2021 10:43 AM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்கள் தவற விடும் ‘வைபை’ ஏ.டி.எம். கார்டுகளை திருடி, அதன் மூலம் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்த நகை கடை ஊழியர் கைதானார்.

பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு, சின்மயா நகரை சேர்ந்தவர் மனோகர் (வயது 32). இவர், அண்ணா நகர் போலீஸ் துணை கமிஷனரிடம் அளித்த புகாரில், “சின்மயா நகரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துவிட்டு எனது வைபை ஏ.டி.எம். கார்டை மறந்துவிட்டு சென்றேன். அதன்பிறகு தவறவிட்ட கார்டை பயன்படுத்தி ரூ.25 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். எனது ஏ.டி.எம். கார்டை மீட்டு தரும்படி” கூறி இருந்தார்.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார், அந்த ஏ.டி.எம். கார்டில் இருந்து பணம் எடுத்த இடத்தை ஆய்வு செய்தபோது, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் எடுத்தது தெரியவந்தது.

தனிப்படை போலீசார் அந்த பெட்ரோல் நிலையத்தில் விசாரித்தபோது, ஒரு வாலிபர் அடிக்கடி வந்து தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி ‘வைபை’ கார்டு மூலம் ரூ.5 ஆயிரம் என பலமுறை எடுத்து சென்றதாகவும், அவர் மீது சந்தேகமாக இருந்ததால் அந்த வாலிபர் புகைப்படத்தை எடுத்து வைத்திருப்பதாகவும் அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

கைது

அந்த புகைப்படத்தை வைத்தும், ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் கரூரைச் சேர்ந்த மணிகண்டன் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மணிகண்டன் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி, சவுகார்பேட்டையில் உள்ள ஒரு நகைக்கடை மற்றும் நகைபட்டறைகளில் வேலை பார்த்து வந்தார்.

ஏ.டி.எம். மையங்களில் பணத்தை எடுக்க வரும் பொதுமக்கள், ஞாபக மறதியால் தவறவிட்டு செல்லும் ‘வைபை’ ஏ.டி.எம்.கார்டுகளை மட்டும் குறிவைத்து திருடி, இதுபோல் பணத்தை எடுத்து மோசடி செய்தது தெரிந்தது.

இந்த கார்டுகளை ரகசிய குறியீட்டு எண் இல்லாமல் ரூ.5 ஆயிரம் வரை எடுக்கலாம் என்பதால் பெட்ரோல் நிலையத்தில் அவசர தேவை என கெஞ்சுவது போல் நடித்து பணத்தை பெற்று சென்றது தெரிந்தது. மணிகண்டனிடம் இருந்து 6 ‘வைபை’ ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story