வனப்பகுதி பசுமைக்கு திரும்பியதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு


வனப்பகுதி பசுமைக்கு திரும்பியதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 8 July 2021 9:50 PM IST (Updated: 8 July 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் பரவலாக மழை பெய்வதால் வனப்பகுதி பசுமைக்கு திரும்பியது. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம் நிலவுகிறது. அதன்படி இந்த ஆண்டும் கோடை காலத்தையொட்டி நீர்நிலைகள் வறண்டு விட்டன. மேலும் வனப்பகுதியிலும் பசுந்தீவனங்கள் காய்ந்து போனது. இதனால் காட்டுயானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர், பசுந்தீவனங்களை தேடி ஊருக்குள் புகுந்து வந்தன. 

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கடந்த மாதத்தில் ஒரு வாரம் மட்டும் பலத்த மழை பெய்தது. அதன்பின்னர் மழையின் தாக்கம் அடியோடு குறைந்தது. இதனால் வறட்சியின் தாக்கம் அதிகரிக்கும் நிலை காணப்பட்டது.

இதையடுத்து கடந்த சில நாட்களாக கூடலூர், முதுமலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து காட்டுயானைகள் கூட்டமாக முதுமலையில் தென்படுகிறது.

இதேபோல் வனப்பகுதியில் உள்ள நாவல் பழ மரங்கள் நன்கு காய்த்து உள்ளதால் அரிய வகை கருங்குரங்கு, மலை அணில் உள்ளிட்டவைகளையும் கூட்டமாக மரங்களில் காண முடிகிறது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதை அவர்கள் காண முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- இந்த ஆண்டு இதுவரை தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாமல் உள்ளது. எனினும் பரவலாக மழை பெய்வதால் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் தண்ணீர் உள்ளது. 

மேலும் பசுந்தீவன தட்டுப்பாடும் ஏற்படவில்லை. இதனால் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கான உணவு பற்றாக்குறைக்கு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது.  மேலும் வனவிலங்குகளின் நடமாட்டத்தையும் அதிகளவில் காண முடிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story