அ.தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவின்படி செயல்படுவேன்


அ.தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவின்படி செயல்படுவேன்
x
தினத்தந்தி 8 July 2021 10:15 PM IST (Updated: 8 July 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் தோல்வி குறித்து நான் தெரிவித்தது எனது சொந்த கருத்து ஆகும். அ.தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவின்படி செயல்படுவேன் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் வல்லம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாட்டார்மங்கலத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு வல்லம் வடக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சி.வி. சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
அப்போது அவர் பேசுகையில், சட்டமன்ற தேர்தலில் நாம் தோல்வியை தழுவவில்லை. வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறோம். பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறோம். ஆளுங்கட்சியினர் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கும் இடத்தில் நாம் இருக்கிறோம். ஆளுங்கட்சியினர் செய்ய முடியாத வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றார். கூட்டத்தில் நிர்வாகிகள் ஆனந்தி அண்ணாதுரை, பன்னீர்செல்வம், சுகுமார், ஏதாநெமிலி சகாதேவன், மனோகர், பாலமுருகன், வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் ரவி, அசோக், கல்ராயன், லட்சாதிபதி, குறிஞ்சி வளவன் மற்றும் அனைத்து பிரிவு ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சொந்த கருத்து 

கூட்டம் முடிந்ததும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
பத்திரிகையாளர் சந்திப்பில் நான் சொல்லாத சில கருத்துகளையும் சேர்த்து, சித்தரித்து வெளியிட்டுள்ளார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறேன். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கான காரணம் குறித்து எனது சொந்த கருத்தை கூறினேன். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், அது அவருடைய சொந்த கருத்து என்றுதான் சொன்னார். அதில் எந்த மாற்றமும் இல்லை. இது தொடர்பாக நாங்கள் பல கருத்துகளை பேசுவோம். ஆனால் எங்கள் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அந்த முடிவின்படி செயல்படுவேன். அதுதான் எங்களது முடிவும். பா.ஜ.க.வினரும் கருத்துகளை கூறி இருக்கிறார்கள். அது அவர்களுடைய கருத்து. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story