திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கோவையில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சமீரன் வழங்கினார்.
கோவை
கோவையில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சமீரன் வழங்கினார்.
குறை தீர்க்கும் முகாம்
கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று திருநங்கைகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.
திருநங்கைகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கான நல வாரிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மாதாந்திர உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும் அங்கு வந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டது. இந்த முகாமில், மூன்றாம் பாலினத்தவர்களாக இருந்து பேராசிரியர், டாக்டர், வக்கீலாக உயர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
அவர்கள் அங்கிருந்த மூன்றாம் பாலினத்தவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். முகாமில் கலந்துகொண்ட கலெக்டர் சமீரன் பேசும்போது கூறியதாவது:-
தலை நிமிர்ந்து வாழமுடிகிறது
சமூக நலத்துறை மூலமாக பெண்கள், குழந்தைகள் மட்டுமல்லாமல் 3-ம் பாலினத்தவரின் நலனுக்காகவும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மூன்றாம் பாலினத்தவர்கள் சமுதாயத்தில் மதிப்புடன் மற்றவர்களைப் போல பாதுகாப்பான நிலையில் தலை நிமிர்ந்து வாழ முடிகிறது.
தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறும் 3-ம் பாலினத்தவர்கள் பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய அடையாள அட்டைகள் மற்றும் அதற்கான எவ்வித ஆவணங்களும் அவர்களிடம் இருப்பதில்லை.
இதனால் மேற்கண்ட ஆவணங்களில் மாற்றம் செய்ய வேண்டி அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
250 பேர்
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி இந்த சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 5 பயனாளிகளுக்கு குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் செய்து தரப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சமூக நலத்துறை மூலம் 250 பயனாளி களுக்கு, 3-ம் பாலினத்தவர்களுக்கான நல வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story