கிராம மக்கள் சாலை மறியல்
100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கருவேப்பிலைபாளையத்தை சேர்ந்த கிராம மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை செய்து வந்தனர். அதன்படி நேற்று 1-வது வார்டு மற்றும் ரோட்டு தெரு மக்கள் வேலைக்கு சென்றனர். ஆனால் ஊராட்சி நிர்வாகத்தினர், தங்களுடைய தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட அட்டை சரியாக இல்லை என்றும், அதனால் வேலை வழங்க முடியாது என்றும் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், 100 நாள் வேலை வழங்கக்கோரியும், இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடு நடைபெறுவதாகவும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வேலை வழங்கப்படுவதாகவும் கூறி கடலூர் -சித்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, ஊராட்சி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைவருக்கும் வேலை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story