கட்டளை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்


கட்டளை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 July 2021 11:27 PM IST (Updated: 8 July 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை வனப்பகுதியில் உள்ள கோடந்தூர் கட்டளை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தளி
உடுமலை வனப்பகுதியில் உள்ள கோடந்தூர் கட்டளை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கட்டளை மாரியம்மன் கோவில்
உடுமலையை அடுத்த ஆனைமலை காப்பக வனப்பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் சின்னாற்றின் கரையில் பிரசித்தி பெற்ற கட்டளை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாரியம்மன் சுயம்புவாக எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
கோடந்தூர் மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த மலைவாழ் மக்கள் காலங்காலமாக கோவிலில் பூஜைகளை செய்து வருகின்றனர். கோவிலுக்கு உடுமலை பகுதி மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வருகின்றனர். அத்துடன் மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் இயற்கையாக விளைந்த நெல்லிக்காய், கடுக்காய், ஜாதிக்காய், சாம்பிராணி, வடுமாங்காய், எலுமிச்சை மற்றும் தேன், தைலம் உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அவற்றை பொதுமக்களும் ஆர்வத்தோடு வாங்கி செல்வார்கள். 
கட்டணம் வசூலிப்பு
இதுதவிர உணவகங்கள் அமைத்தும் வருமானத்தை ஈட்டி வருகின்றனர். அதன் மூலமாக கோடந்தூர், பொறுப்பாறு, ஆட்டுமலை பகுதியை சேர்ந்த மலைவாழ்மக்கள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை சின்னாறு சோதனைச்சாவடியில் இருந்து கோவிலுக்கு வனத்துறையினர் மூலமாக வாகனத்தில் அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமும் அவர்களிடம் வசூலிக்கப்படுகிறது. அந்த கட்டணம் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழுவின் கணக்கில் செலுத்தப்பட்டு மலைவாழ் குடியிருப்பு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பக்தர்கள் தரிசனத்துக்கு...
இந்த சூழலில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 
அப்போது வனப்பகுதியில் உள்ள கட்டளை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வனத்துறையினர் சார்பில் தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று வரையிலும் அங்கு தடை நீடித்து வருகிறது. தற்போது ஊரடங்கில் படிப்படியாக அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வருகிறது.
இதையடுத்து கட்டளை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் விளைபொருட்களை விற்பனை செய்வதுடன் வருமானம் ஈட்டுவதற்கும் ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தனர். ஆனால் மலைவாழ் குடியிருப்புகளான குளிப்பட்டி, மாவடப்பு பகுதியில் கொரோனா தொற்று தென்பட்டதால் இதுகுறித்து கலந்து ஆலோசித்து அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். அதன்படி இன்னும் ஓரிரு நாட்களில் கட்டளை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

Next Story