பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 9 July 2021 1:41 AM IST (Updated: 9 July 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

புதுக்கோட்டை
ஒப்பாரி வைத்து போராட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் எந்திரத்தை கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில், கட்சி நிர்வாகிகள் வக்கீல் சந்திரசேகரன், குட்லக் முகமது மீரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆவுடையார்கோவில்-கறம்பக்குடி
ஆவுடையார்கோவிலில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் கூடலூர் முத்து தலைமையிலும், நகர தலைவர் பாண்டியன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கறம்பக்குடி வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சார்பில் சீனி கடைமுக்கத்தில் வட்டார தலைவர் ஞானசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர தலைவர் ரெங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
கீரனூர்- பொன்னமராவதி
குன்றாண்டார் கோவில் ஒன்றியம், கீரனூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கீரனூர் காந்தி சிலை முன்பு நகரத் தலைவர் முரளி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், வட்டாரத் தலைவர் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி காந்தி சிலை முன்பு வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பி.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பஸ் நிலையம் முன்பு நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகரத் தலைவர் பழனியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலங்குடி-அன்னவாசல்
ஆலங்குடி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் வடகாடு முக்கத்தில் கட்சியின் மாவட்டத் தலைவர் ரா.சுப்புராம் தலைமையிலும், நகர தலைவர் கென்னடி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சுஜாதா, மாவட்ட துணைத்தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
அன்னவாசல் ஒன்றியம், மலைக்குடிப்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வட்டார தலைவர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், மாவட்ட துணை தலைவர் சுப்பையா உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டானர்.
மணமேல்குடி
மணமேல்குடியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை வட்டார காங்கிரஸ் தலைவர் தெற்கு சரவணன் தொடங்கி வைத்தார். இதில், திரளானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்திட்டனர். இதில், மாவட்ட செயலாளர் சந்திரமோகன், வடக்கு வட்டார தலைவர் மன்னர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீரமங்கலம்-அரிமளம்
கீரமங்கலத்தில், காலி எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து மத்திய அரசுக்கு எதிராக கீரமங்கலம் நகரத் தலைவர் தனபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தலைவர் சுப்புராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பெண்கள் உள்பட 40 பேர் மீது கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரிமளம் ஒன்றிய, வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடைெபற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் அர்ஜூனன் தலைமை தாங்கினார். வடக்கு வட்டார தலைவர் வீரப்பன் முன்னிலை வகித்தார். முன்னதாக மோட்டார் சைக்கிளை மாட்டு வண்டியில் ஏற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

Next Story