ராதாபுரம் பகுதிக்கு தண்ணீர்கொண்டு செல்வதில் விதிமீறல் இல்லை
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் எந்த விதி மீறலும் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
தென்தாமரைகுளம்,
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் எந்த விதி மீறலும் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
சபாநாயகர் பேட்டி
தமிழக சட்டசபை சபாநாயகரும், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அப்பாவு நேற்று காலை குமரி மாவட்டம் சாமிதோப்புக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காமராஜர் ஆட்சி காலத்தில் ராதாபுரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டுமென்று 42 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையை, 48 அடி தண்ணீர் தேக்கும் அளவிற்கு உயர்த்தினார். கூடுதலாக உள்ள 6 அடி தண்ணீர் ராதாபுரம் பகுதியில் உள்ள 17 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு நேரடி பாசனத்திற்கும், 52 குளங்கள் மூலம் விவசாயம் செய்யப்படும் 900 ஏக்கர் நிலத்திற்கும் தண்ணீர் கொண்டு செல்வதற்காக ராதாபுரம் கால்வாயை காமராஜர் அமைத்தார்.
விதிமீறல் இல்லை
ராதாபுரத்திற்கு பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்வது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் விதிமீறல்கள் என்றும் மக்களிடையே ஒரு பேச்சு இருக்கிறது.
ஆனால் பேச்சிப்பாறை அணையில் ராதாபுரத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூடுதலாக அமைக்கப்பட்ட 6 அடி உயர தண்ணீரில் கால்பகுதி மட்டுமே ராதாபுரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் எந்தவிதமான விதிமீறல்களும் இல்லை.
பொது விடுமுறை
அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தினமான மாசி 20-ந்தேதியன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை விடுவதற்கு, தமிழக முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்படும். மேலும் பிற மாநிலங்களைப் போல் தமிழகத்தில் மேல்சபை கொண்டு வருவதற்கு சட்டசபையில் தான் முடிவு எடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் அன்புவனம் நிறுவனர் பால.பிரஜாபதி அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் சாமிதோப்பு தலைமை பதி குருக்கள் பால.ஜனாதிபதி, பால.லோகாதிபதி மற்றும் அய்யா வழி பாடகர் சிவச்சந்திரன் ஆகியோர் வீடுகளுக்கு சென்று அவர்களையும் சந்தித்து பேசினார்.
அப்போது அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி, வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி, பேராசிரியர்கள் டி.சி. மகேஷ், தர்ம ரஜினி, பேரூர் செயலாளர்கள் வைகுண்ட பெருமாள், பூவியூர் காமராஜ், ஒன்றிய சிறுபான்மையினர் அணி செயலாளர் எட்வின் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story