காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து, நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.
நாகர்கோவில்,
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து, நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.
கையெழுத்து இயக்கம்
குமரி மாவட்டத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்று காலை நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் முன்பு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இதற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக விஜய் வசந்த் எம்.பி. கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது கார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் ஆகியோரிடம் கையெழுத்து பெறப்பட்டது.
விஜய்வசந்த் எம்.பி. பேட்டி
விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மக்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் தற்போது பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது வேதனை அளிக்கிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது.
அதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி, கையெழுத்து இயக்கங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு பதில் சொல்லியாக வேண்டும். கியாஸ் விலை உயர்வு மக்களை மேலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. விரைவில் நாடாளுமன்றம் கூட இருக்கிறது. அப்போது ரபேல் ஊழல், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடர்பாக கேள்வி எழுப்புவேன்.
இவ்வாறு விஜய்வசந்த் எம்.பி கூறினார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் பினுலால் சிங், மாநகர தலைவர் அலெக்ஸ், வட்டார தலைவர்கள் வைகுண்ட தாஸ், முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சீனிவாசன், லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திட்டுவிளை
இதுபோல், திட்டுவிளை சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்ைத விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story