சதுரகிரியில் திடீர் மழை; 200 பக்தர்கள் மலையில் தவிப்பு
சதுரகிரி மலை பகுதியில் திடீரென மழை பெய்ததால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 200 பேர் மலையில் தவிப்புக்குள்ளாகினர்.
வத்திராயிருப்பு,
சதுரகிரி மலை பகுதியில் திடீரென மழை பெய்ததால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 200 பேர் மலையில் தவிப்புக்குள்ளாகினர்..
பக்தர்களுக்கு அனுமதி
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் அமாவாசையையொட்டி 4 நாட்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் மழையினால் நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சதுரகிரிக்கு செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலையில் மழை பெய்யாததால் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சதுரகிரி மலை ஏற முடியும் என்பதால், அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
சாமி தரிசனம்
காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் உடல் வெப்பநிலை மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மதியம் 1 மணிக்கு வனத்துறை கேட் அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மலையில் தவிப்பு
இந்தநிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரிசுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ள பகுதியிலும் நேற்று இரவு திடீர் மழை பெய்தது. இதனால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டோர் தவிப்புக்குள்ளான நிலையில், பாதுகாப்பாக மலையில் தங்க வைக்கப்பட்டனர்.
மலையில் தங்க வைக்கப்பட்டுள்ள பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆனி அமாவாசைைய முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி மற்றும் கோவில் செயலாளர் விஸ்வநாத் ஆகியோர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story