9 வயது சிறுமிக்கு சூடுவைத்த தாய் மீது வழக்கு


9 வயது சிறுமிக்கு சூடுவைத்த தாய் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 July 2021 9:07 PM GMT (Updated: 2021-07-09T02:37:56+05:30)

பேச்சை கேட்காமல் விளையாட சென்றதால் ஆத்திரத்தில் 9 வயது சிறுமிக்கு சூடுவைத்த தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு: பெங்களூரு ஆர்.டி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பத்மா. இவருக்கு திருமணம் முடிந்து கணவரும், 9 வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்மாவின் மகள் வெளியே விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது பத்மா, தனது மகளிடம் வெளியே விளையாட செல்ல கூடாது என்று கூறியுள்ளார்.

ஆனாலும் சிறுமி பக்கத்து வீட்டில் சென்று விளையாடியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பத்மா, எரியும் மெழுகுவர்த்தியால் மகளின் காலில் சூடுவைத்ததாக தெரிகிறது. இதில் சிறுமியின் காலில் தீக்காயம் உண்டானது. இதனால் தனது மகளை, பத்மா ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு வைத்து காலில் தீக்காயம் உண்டானது பற்றி சிறுமியிடம், டாக்டர்கள் கேட்டு உள்ளனர். அப்போது தாய் தனது காலில் சூடுவைத்தது குறித்து சிறுமி கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து டாக்டர்கள் குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவம் குறித்து பத்மா மீது ஆர்.டி.நகர் போலீஸ் நிலையத்தில், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்பேரில் பத்மா மீது ஆர்.டி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story