குறைகளை தெரிவிக்க வசதியாக ரேஷன் கடைகளில் புகார் புத்தகம் வைக்க வேண்டும் அமைச்சர் சக்கரபாணி பேட்டி


குறைகளை தெரிவிக்க வசதியாக ரேஷன் கடைகளில் புகார் புத்தகம் வைக்க வேண்டும் அமைச்சர் சக்கரபாணி பேட்டி
x
தினத்தந்தி 9 July 2021 11:55 AM IST (Updated: 9 July 2021 11:55 AM IST)
t-max-icont-min-icon

குறைகளை தெரிவிக்க வசதியாக ரேஷன் கடைகளில் புகார் புத்தகம் வைக்க வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி பேட்டி அளித்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக உணவுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கினார். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்குவதாக தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 14 வகையான தரமான மளிகை தொகுப்புகள் வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 410 பேர் ரேஷன்கார்டு வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.

ரேஷன்கார்டு வழங்க நடவடிக்கை

அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன்கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் பொன்னேரி, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் ரேஷன்கார்டு வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன்கார்டுகளை பெற எளிய வழிமுறைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் அதிகமாக விளைகிறது. நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யும்போது நெல் தேங்கி, மழையில் நனைந்து சேதமாகிறது. அந்த நெல்லை பாதுகாப்பான கட்டிடத்தில் வைக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது சம்பந்தமாக வேளாண்மை துறை செயலாளருடன் பேசி மாற்று துறையின் அரசாங்க கட்டிடங்கள் எங்கெல்லாம் காலியாக உள்ளதோ அங்கு நெல்லை சேமித்து வைத்து உடனடியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலாவதியான பொருட்கள்

ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் ஏதாவது குறைகள் இருந்தால் அதனை எழுதி வைப்பதற்கு ஏதுவாக அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் புத்தகத்தை கண்டிப்பாக வைக்க வேண்டும். ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன்காடுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் உரிய நேரத்தில் நிதி நிலையை கருத்தில் கொண்டு அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து அமைச்சர்கள் சக்கரபாணி, ஆவடி சா.மு.நாசர் திருவள்ளூர் ம.பொ.சி சாலையில் உள்ள ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டு அதன் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் பூண்டி ஒன்றியம் தோமூர் ஊராட்சியில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் மற்றும் வரதபுரம் ஊராட்சியில் உள்ள அரிசி ஆலையையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் உணவு துறை செயலாளர் நசிமுதீன், குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் டாக்டர்.ஆனந்தகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் ராஜாராமன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்.எல்.ஏ.க்.கள் வி.ஜி. ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, சுதர்சனம், கோவிந்தராஜன், சந்திரன், கணபதி, ஜோசப் சாமுவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பூபதி மற்றும் பலர் இருந்தனர்.

Next Story