‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: கிளியனூர்-புனவாசல் இணைப்பு பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கிளியனூர்-புனவாசல் இணைப்பு பாலம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கூத்தாநல்லூர்,
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ளது கிளியனூர் கிராமம். இந்த கிராமத்தில் பெருமாள் கோவில் தெரு, தாமரைக்குளம் தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு, மேலத்தெரு, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமம் வெண்ணாற்றங்கரையில் உள்ளது. கிளியனூர் கிராமத்துக்கும், புனவாசல் கிராமத்துக்கும் இடையே இணைப்பு பாலம் 80 ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இதனை வடபாதிமங்கலம், கிளியனூர், புனவாசல் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நாளடைவில் பாலம் சேதம் அடைந்தது. பாலத்தின் தடுப்புச்சுவர்கள் இடிந்தும், சிமெண்டு காரைகள் பெயர்ந்தும் காணப்பட்டது. கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவுக்கு பாலம் மோசமான நிலையில் இருந்தது.
பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டு இருந்ததால், கிராம மக்கள் பாலத்தை கடந்து செல்ல அச்சம் தெரிவித்து வந்தனர். பாலத்திலிருந்து சிலர் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
மிகவும் குறுகலான இந்த பாலத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்தனர். இதுதொடர்பான செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக சேதம் அடைந்த பாலம் அகற்றப்பட்டு, அதே இடத்தில் புதிதாக அகலமான சிமெண்டு பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அங்கு பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. இந்த பணிகளை விரைவுபடுத்தி பாலத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாகவும் ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையிலும் பாலம் கட்டும் கட்டுமான பணிகள் வேகம் எடுத்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான நடவடிக்கையை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story