பழனி அருகே தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பயங்கர தீ; ரூ.2 கோடி பொருட்கள் எரிந்து நாசம்
பழனி அருகே தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
கீரனூர்:
பழனி அருகே தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
ஏற்றுமதி நிறுவனம்
பழனி அருகே ஆண்டிநாயக்கன்வலசு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பிராய்லர் கோழி இறைச்சி ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. தற்போது அங்கிருந்து இறைச்சியை ஏற்றுமதி செய்யும் வகையில் தொழில்நுட்ப எந்திரங்கள் பொருத்தும் பணிகள், கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. உற்பத்தி தொடங்க இருந்த நிலையில் அங்கு சோதனை முறையில் எந்திரங்கள் இயக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் இந்த நிறுவனத்தில் உள்ள எந்திரங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தன.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பணியாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் அவர்கள் உடனே இதுகுறித்து பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
பொருட்கள் எரிந்து நாசம்
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பழனி தீயணைப்பு படைவீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நிறுவனத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவி பற்றி எரிந்தது. இதனால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. உடனே ஒட்டன்சத்திரம், மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டனர்.
அப்போது 4 தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு படைவீரர்கள் இணைந்து சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் நிறுவனத்தில் இருந்த எந்திரங்கள், கட்டுமான பொருட்கள் என சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தீவிபத்திற்கான காரணம் குறித்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story