நரம்பு மூலம் மருந்து செலுத்தி வலி நிவாரண சிகிச்சை


நரம்பு மூலம் மருந்து செலுத்தி வலி நிவாரண சிகிச்சை
x
தினத்தந்தி 9 July 2021 9:41 PM IST (Updated: 9 July 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நரம்பு மூலம் மருந்து செலுத்தி வலி நிவாரண சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி: 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு என்னுமிடத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு வலி நிவாரண சிகிச்சை பிரிவில் நரம்பு மூலம் மருந்து செலுத்தி வலிக்கு தீர்வு காண மயக்கவியல் துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

சென்னை அரசு மருத்துவமனையில் மட்டுமே இருந்து வரும் இந்த சிகிச்சை முறை தற்போது தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த சிகிச்சையின் மூலம் தீராத மூட்டு வலி, தண்டு வடம் வலி, கை, கால் வலி, இடுப்பு வலி மற்றும் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் வலி உள்ளிட்ட பல்வேறு வலிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையில் அறுவை சிகிச்சை இல்லாமல் வலிக்கு தீர்வு காண்பதால் நோயாளிகள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மயக்கவியல் டாக்டர் கண்ணன் போஜராஜா கூறுகையில், 
தீராத நாள்பட்ட வலிக்கு தீர்வு காணும் வகையில் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறோம். சி.ஆம். ஸ்கேன் கருவி மற்றும் யூ.எஸ்.ஜி. ஸ்கேன் கருவியை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. 


இந்த சிகிச்சையில் உடலில் ஏற்படும் வலிக்கு காரணமான நரம்பை தண்டு வடத்தில் கண்டுபிடிப்போம். பின்னர் அந்த நரம்பில் நேரடியாக மருந்தை செலுத்தி மரப்புத்தன்மைக்கு கொண்டு செல்வதால் வலி குறைந்து விடுகிறது. இதுவரை 19 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் இந்த வலி நிவாரண சிகிச்சைக்கு அதிநவீன கருவி மற்றும் சிறப்பு வார்டுகளை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்றார். 


Next Story