தடுப்பூசி போட்ட 3 மாத பெண் குழந்தை சாவு
பெரியகுளம் அருகே தடுப்பூசி போட்ட 3 மாத பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது. குழந்தையின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
பெரியகுளம்:
பெண் குழந்தைக்கு தடுப்பூசி
கோவை மாவட்டம் சூலூர் மார்க்கெட் ரோடு பகுதியில் வசிப்பவர் பிரகாஷ் (வயது 29). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சரண்யா. இவர் கர்ப்பிணியாக இருந்தார்.
தலைப்பிரசவம் என்பதால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சரண்யா பெரியகுளம் அருகே வடுகபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அங்கு கடந்த ஏப்ரல் 14-ந்தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு லிகிதாஸ்ரீ என்று பெயரிட்டனர். குழந்தையை தனது தாய் வீட்டில் வைத்து பராமரித்து வந்தார்.
கடந்த 7-ந்தேதி சரண்யா தனது குழந்தைக்கு 3-வது மாதத்துக்கான தடுப்பூசி செலுத்துவதற்கு வடுகபட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
குழந்தை சாவு
தடுப்பூசி செலுத்திவிட்டு வீட்டுக்கு வந்தபின்னர் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. 2 நாட்கள் இந்த காய்ச்சல் நீடித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் குழந்தையை சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.
108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவில் குழந்தை கொண்டு வரப்பட்டது. அங்கு குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர், அந்த குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைக்கேட்ட குழந்தையின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசில் புகார்
இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தையின் தந்தை பிரகாஷ் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் குழந்தையின் குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பூசி செலுத்திய குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரி தகவல்
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "குழந்தைகளுக்கு 14-வது வாரத்தில் பென்டாவேலண்ட், போலியோ தடுப்பூசிகளும், ரோட்டோ வைரஸ் தடுப்பு சொட்டு மருந்தும் வழங்கப்படும். பென்டாவேலண்ட் தடுப்பூசி நிமோனியா, மூளை பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு செலுத்தப்படும். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் இந்த குழந்தை உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
அதே நாளில், அதே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மற்ற குழந்தைகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. பிரேத பரிசோதனையில் தடுப்பூசி செலுத்தியதால் எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்துள்ளது. குழந்தையின் உயிரிழப்பு காரணம் அறிய உள்ளுறுப்புகளை பரிசோதனை செய்ய மதுரையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
Related Tags :
Next Story