ஊட்டி அருகே சூட்டிங்மட்டத்தை மேம்படுத்தும் பணி மும்முரம்
ஊட்டி அருகே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சூட்டிங்மட்டத்தை மேம்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஊட்டி,
நீலகிரி வன கோட்டத்தின் கட்டுப்பாட்டில் சூழல் மேம்பாட்டு குழு மூலம் ஊட்டி அருகே சூட்டிங்மட்டம் சுற்றுலா தலம் செயல்பட்டு வருகிறது. இது கொரோனா பரவல் காரணமாக கடந்த 2½ மாதங்களுக்கு மேல் மூடப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் வராததால், அங்கு சோலை மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நர்சரியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோலை மரக்கன்றுகள் உள்ளது. ஊரடங்கால் சூட்டிங்மட்டம் திறக்கப்படாததால், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அதனை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இயற்கை சூழலோடு மரங்களால் அமைக்கப்பட்டதை போன்ற நுழைவுவாயில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதில் வரையாடு, சிறுத்தைப்புலி, மலபார் அணில், பறவைகள் அமர்ந்திருப்பது போன்று தத்ரூபமாக காட்சி அளிக்கிறது. ஒருபுறம் நுழைவுவாயிலில் தோடர் இன மக்கள் வரவேற்பது போல அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
நுழைவுவாயிலை கடந்து உள்ளே செல்லும் வழியில் இருபுறமும் புதிதாக தடுப்புகள் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த தடுப்புகள் மரங்களை வெட்டி, அதன் கிளைகளை இணைத்து அமைக்கப்பட்டது போன்று காட்சியமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் சிமெண்டு, மண் கலவை மூலம் கட்டப்பட்டு இருக்கிறது.
சுற்றுலா பயணிகளிடம் நுழைவு டிக்கெட்டை சரிபார்க்கும் இடத்தில் ஊழியர்களுக்கு மழை பெய்யும் நேரங்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சீரமைக்கப்பட்டு வருகிறது. இது தவிர புல்வெளிகளை பராமரிக்கும் பணி நடந்து வருகின்றன. சூட்டிங்மட்டத்தில் வெளிமாவட்ட, வெளிமாநில சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செய்வது வழக்கம். இதை கருத்தில் கொண்டு மலையை சுற்றிய பகுதிகளில் 250 சோலை மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இது வளரும் பட்சத்தில் மேலும் அழகு சேர்க்கும்.
வருகிற நாட்களில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு, சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story