10 கிராமங்களில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது


10 கிராமங்களில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது
x
தினத்தந்தி 9 July 2021 10:37 PM IST (Updated: 9 July 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம்-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் 10 கிராமங்களில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது.

விழுப்புரம், 

தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பகலில் வெயில் சுட்டெரிப்பதும், மாலை, இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான பிடாகம், கண்டமானடி, குச்சிப்பாளையம், நன்னாடு, பெரும்பாக்கம், காணை, கோலியனூர், சாலைஅகரம், வளவனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் பல்வேறு இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் இடி- மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு சிறிது நேரம் மழை ஓய்ந்த நிலையில் மீண்டும் 2 மணியளவில் மழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை வரை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது. இடையிடையே அவ்வப்போது பலத்த மழையாகவும் பெய்தது.

சாலைகளில் ஓடிய தண்ணீர் 

இதனால் சாலைகளில் மழைநீர், வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. அதுபோல் தாழ்வான பகுதிகளான சித்தேரிக்கரை, மணிநகர், கம்பன் நகர், ஆசிரியர் நகர், கே.கே. நகர், சுதாகர் நகர் உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. 
அதுமட்டுமன்றி விழுப்புரம் புதிய பஸ் நிலையம், கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை ஆகிய இடங்களிலும் மழைநீர் தேங்கியது. உடனே நேற்று காலை நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மின் மோட்டார் மூலம், தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றினர்.

நெல் மூட்டைகள் சேதம்

விழுப்புரம் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக கல்பட்டு, காணைகுப்பம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது. இதேபோல் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைத்திருந்த 500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், மற்றும் பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமானது. 
மேலும் விக்கிரவாண்டி, செஞ்சி, கெடார், திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம், வானூர், ஆரோவில், கோட்டக்குப்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. 

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டையில் பெய்த கன மழையினால் குமாரமங்கலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழைநீரில் மூழ்கி சேதமானது. 
மேலும் உ.செல்லூர், எஸ்.மலையனூர், பரிக்கல், கெடிலம், திருநாவலூர், கணையாறு, குச்சிப்பாளையம், புகைப்பட்டி, புத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. சிலரது வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். சிலர் பாத்திரங்கள் மூலம் தேங்கிய தண்ணீரை இறைத்து அப்புறப்படுத்தினர்.  

மின்தடை

உளுந்தூர்பேட்டை உழவர் சந்தை அருகே மின்கம்பிகள் மீது மரக்கிளை விழுந்ததால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். திருக்கோவிலூர் பகுதியில் மழை பெய்தபோது மின்னல் தாக்கி கோலப்பாறை கிராமத்தை சேர்ந்த ரவி, பழங்கூர் கிராமத்தை சேர்ந்த முருகன் ஆகியோரது தலா ஒரு பசுமாடு செத்தது. 
ரிஷிவந்தியம் ஒன்றியம் சூளாங்குறிச்சி உடல்மாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்த 130 ஆண்டு பழமை வாய்ந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்ததில் அருகில் உள்ள வீடுகள் சேதம் அடைந்தன. 2 மின்கம்பங்கள் உடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எடுத்தனூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. 

மழை அளவு

இது தவிர கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், திருக்கோவிலூர் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழைபெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னசேலத்தில் 15 மில்லி மீட்டர் மழையும், அதிகபட்சமாக சங்கராபுரம் தாலுகா களையநல்லூரில் 136 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. இது தவிர சூளாங்குறிச்சி-131, எறையூர்-131, தியாகதுருகம்-102, கடுவானூர்-94, ரிஷிவந்தியம்-85, திருக்கோவிலூர்-79, கள்ளக்குறிச்சி-68, மூங்கில்துறைப்பட்டு-64 மில்லி மீட்டர் மழை பதிவானது. 
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
மரக்காணம்...........................106
வளவனூர்................................81
மணம்பூண்டி...........................80
கோலியனூர்............................78
முகையூர்..................................70
செஞ்சி......................................62
விழுப்புரம்................................55
திண்டிவனம்.............................50
கெடார்.......................................46
கஞ்சனூர்.................................38
அனந்தபுரம்.............................33
வல்லம்.....................................32
நேமூர்.......................................28
வளத்தி.....................................28
அவலூர்பேட்டை......................25
அரசூர்.......................................24
சூரப்பட்டு..................................22
திருவெண்ணெய்நல்லூர்........21
செம்மேடு............................20.40
வானூர்.....................................20

Next Story