அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்
கள்ளக்குறிச்சி
அரசு மருத்துவக்கல்லூரி
கள்ளக்குறிச்சி சிறுவங்கூரில் ரூ.381 கோடியே 76 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை கட்டிடம் புதியதாக கட்டப்பட்டு வருகிறது.
இதில் மருத்துவக் கல்லூரி கட்டிடம் மற்றும் 700 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை கட்டிடம், மாணவ, மாணவிகளுக்கான விடுதி, செவிலியர் விடுதி, மருத்துவ பேராசிரியர், கல்லூரி முதல்வர் மற்றும் குடிமையியல் மருத்துவர் குடியிருப்பு, நவீன சமையலறை கட்டிடம், பிணவறை, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. இதில் 80 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன.
கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேற்று அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை ஆய்வுசெய்தார். அப்போது பிரதான கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள வகுப்பறை, ஆய்வுக் கூடம், உடற்கூறியல் அருங்காட்சியகம் மற்றும் உடற் கூறியல் ஆய்வறை ஆகியவற்றை பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து 700 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை கட்டிடம், குடியிருப்பு வளாக கட்டிடங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை முகமை மூலம் நடைபெற்று வரும் உற்பத்தி நிலைய கட்டுமான பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
அப்போது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கிய அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமான பணிகளை அடுத்த ஆண்டு(2022) பிப்ரவரியில் முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் நடப்பு கல்வி ஆண்டிலேயே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளும் வகையில் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை(கட்டுமானம்) செயற்பொறியாளர் மணிவண்ணன், மருத்துவக் கல்லூரி குடிமையியல் மருத்துவர் பழமலை, நேரு, உதவி செயற்பொறியாளர் சுப்பையா மற்றும் உதவிப் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story