பெண்ணிடம் பணம் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது


பெண்ணிடம் பணம் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 9 July 2021 10:47 PM IST (Updated: 9 July 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

பரிசு பொருட்களை தருவதாக கூறி பெண்ணிடம் பணம் மோசடி செய்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், ஜூலை.10-

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை கணேசா நகரில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன் மகள் மீனாட்சி (வயது 48). இவர் வீட்டிற்கு கடந்த 18.6.2021 அன்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து பரிசு கூப்பன் என்றுகூறி ஒரு ரூபாய்க்கு ஒரு கூப்பன் கொடுத்துள்ளார். அந்த கூப்பனில் பரிசுப்பொருளாக சமையல் கியாஸ் அடுப்பு, மிக்சி விழுந்ததாகவும் மீனாட்சி அதற்குரிய ரூ.4,500-ஐ கொடுத்து அந்த பொருட்களை பெற்றுக் கொண்டார்.
அதன்பிறகு 21.6.2021 அன்று மீனாட்சியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், உங்களுக்கு ஸ்கூட்டர், எல்.இ.டி. டி.வி., 52 கிராம் தங்க காசு ஆகியவை பரிசாக விழுந்ததாக ஆசைவார்த்தை கூறியதோடு அந்த பொருட்களை வழங்க வேண்டுமெனில் ரூ.18,800-ஐ வங்கி கணக்கில் செலுத்தும்படி கூறினார். இதனை நம்பிய மீனாட்சி அந்த பணத்தை அவர் கூறிய தேசியமயமாக்கப்பட்ட வங்கியான களக்காட்டில் உள்ள செல்லம்மாள் என்ற பெயருடைய கணக்கிற்கு 2 நாட்கள் கழித்து அனுப்பியுள்ளார்.

பணம் மோசடி

பணத்தை பெற்ற நபர்கள், மேற்கண்ட பொருட்களை அனுப்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மீனாட்சி, அந்த நபர்களை தொடர்புகொண்டு பணத்தை திரும்பத்தரும்படி கேட்டதற்கு பணம் தராமல் மீண்டும் பணம் அனுப்புமாறு மீனாட்சியை மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து அவர் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். புகாரை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா, இந்த புகார் மனுவை மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணையை தொடங்கினர்.

2 வாலிபர்கள் கைது

மேலும் மீனாட்சியுடன் செல்போனில் பேசிய நபர்களின் செல்போன் எண் விவரங்களை சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் விசாரணை செய்ததில் பணத்தை மோசடி செய்தது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே லட்சுமியாபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் இசக்கிமுத்து (27), திருவேங்கடம் இந்திரா நகரைச் சேர்ந்த இசக்கியின் மகன் கருப்பசாமி (28) என்பது தெரியவந்தது.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த தனிப்படை போலீசார், தென்காசிக்கு விரைந்து சென்று இசக்கிமுத்து, கருப்பசாமி ஆகிய இருவரையும் மடக்கிப்பிடித்து விழுப்புரம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் இருவரையும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story