அம்மிக்கல், கிரைண்டர் கல் கொத்துவது போன்று வீடுகளை நோட்டமிட்டு 17 இடங்களில் கொள்ளையடித்த தேனி முகமூடி கும்பல் சிக்கியது 53 பவுன் நகைகள் தங்கக்கட்டிகளாக மீட்பு
அம்மிக்கல், கிரைண்டர் கல் கொத்துவது போன்று வீடுகளை நோட்டமிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 17 இடங்களில் கொள்ளையடித்த தேனி முகமூடி கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 53 பவுன் நகைகள் தங்கக்கட்டிகளாக மீட்கப்பட்டது.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை அடுத்த சென்னமநாயக்கன்பட்டியில் வசிப்பவர் பழனி (வயது 57). இவர் பொது சுகாதார துறையில் ஊழியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அருந்ததி ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் ராகுல். கடந்த 2-ந்தேதி இவர்கள் 3 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் முகமூடி அணிந்த 5 பேர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்து அவர்களை தாக்கி கத்திமுனையில் வீட்டிலிருந்த 17 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர்.
தனிப்படை போலீசார்
இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் பழனி புகார் செய்தார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின்பேரில் திண்டுக்கல் ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன், நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் ஆகியோர் மேற்பார்வையில் திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன்குணசேகரன், ஷேக் தாவூத், ஷேக், கண்ணதாசன் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
கொள்ளையர்கள் கைது
இவர்கள் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த தகவலின்பேரில், தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தை சேர்ந்த செல்வம் மகன் சந்தோஷ் (22), அதே ஊரை சேர்ந்த ராஜன் மகன் அர்ஜுன் (26), வீரபாண்டியை சேர்ந்த ராஜன் மகன் அய்யப்பன் (20) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் திண்டுக்கல், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, தாடிக்கொம்பு உள்பட திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 17 இடங்களில் முகமூடி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதன்மூலம் அவர்கள் மொத்தம் 74 பவுன் நகைகளை கொள்ளையடித்து உள்ளனர். இதையடுத்து அவர்களிடமிருந்து 53 பவுன் நகைகளை தங்கக்கட்டிகளாக போலீசார் மீட்டனர். மற்ற நகைகளை அவர்கள் விற்று செலவு செய்து உள்ளனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஆள் இருந்தால் மட்டுமே கொள்ளை
போலீசார் விசாரணையில், இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இவர்கள் காலையில் அம்மிக்கல், ஆட்டு உரல், கிரைண்டர் கல் போன்றவற்றை கொத்தி கொடுப்பதாக நகரங்கள் மற்றும் கிராமங்களில் வந்து வீடுகளை நோட்டமிடுவார்கள். பின்னர் அவர்கள், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணிக்குள்ளாக தாங்கள் ஏற்கனவே நோட்டமிட்டுள்ள வீடுகளுக்கு கொள்ளையடிக்க செல்கின்றனர்.
குறிப்பாக கதவில் காதை வைத்து உள்ளே மின்விசிறிகள் சுழலும் சத்தம் கேட்டு ஆள் இருந்தால் மட்டுமே இவர்கள் கொள்ளையடிக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்கின்றனர். அவ்வாறு உள்ளே சென்றதும் உடனே கத்தியை காண்பித்து மிரட்டி பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை பறித்து கொள்வார்கள். அத்துடன் கத்திமுனையில் வீட்டில் வைத்துள்ள வேறு நகைகளையும் கொள்ளையடிப்பார்கள்.
இவர்கள் கைவரிசை காட்டி உள்ள 17 இடங்களிலும் ஒரே மாதிரியாகவே கொள்ளை நடந்து இருந்ததால் இதனையே துருப்புச்சீட்டாக வைத்து கொள்ளையர்களை போலீசார் மடக்கிப்பிடித்துள்ளனர்.
தங்கக்கட்டிகள்
இவர்கள் கொள்ளையடிக்கும் நகைகளை உடனடியாக உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி வைத்துக்கொள்வதை வாடிக்கையாக வைத்து உள்ளனர். நகைகளை உடனே உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றினால் போலீசாரிடம் சிக்கிக்கொண்டால் நகைகளை அடையாளம் கண்டுபிடிக்க இயலாது என்றும், விற்பனை செய்வதில் சிக்கல் இருக்காது என்றும் இவ்வாறு அவர்கள் செய்து உள்ளனர். நேற்று கொள்ளையர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 53 பவுன் நகைகளும் தங்கக்கட்டிகளாக மாற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கொள்ளையில் மேலும் 2 வாலிபர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story