பரங்கிப்பேட்டை அருகே பயங்கரம் ஓடும் பஸ்சில் மெக்கானிக் அடித்துக்கொலை ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் கைது
பரங்கிப்பேட்டை அருகே ஓடும் பஸ்சில் மெக்கானிக் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை அருகே உள்ள பெரியகுமட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் வெங்கடாஜலபதி (வயது 51). மெக்கானிக். இவர் சம்மந்தம் கிராமத்தில் மோட்டார் சைக்கிள் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வந்தார்.
நேற்று காலை வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் வாங்குவதற்காக வெங்கடாஜலபதி கடலூருக்கு பஸ்சில் சென்றார். பின்னர் தேவையான உதிரிபாகங்களை வாங்கிக்கொண்டு, அரசு பஸ்சில் கடலூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த சிதம்பரம் பகுதியை சேர்ந்த 3 பேர் வெங்கடாஜலபதியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை பார்த்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் பஸ்சை முட்லூர் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி அவர்களை இறக்கி விட்டனர்.
பின்னர் வெங்கடாஜலபதி தனது மனைவி லட்சுமிக்கு போன் செய்து, தான் முட்லூர் வந்து விட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
திடீர் சாவு
அப்போது பெரியகுமட்டியை சேர்ந்த கதிரவன், சுதாகர் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து, வெங்கடாஜலபதியை வீட்டுக்கு அழைத்து சென்றனர். வீட்டுக்கு சென்ற அவர் சிறிது நேரத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார்.
உடன் அவரை மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து இறந்துபோன வெங்கடாஜலபதியின் மனைவி லட்சுமி பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில், எனது கணவர் பஸ்சில் வந்தபோது, அவரிடம் தகராறில் ஈடுபட்ட 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா வழக்குப்பதிவு செய்து, வெங்கடாஜலபதியுடன் தகராறில் ஈடுபட்ட 3 பேர் பற்றியும் விசாரணை நடத்தினார்.
அடித்துக்கொலை
விசாரணையில், சிதம்பரத்தை சேர்ந்த ஆட்டோ டரைவர்களான பள்ளிப்படையை சேர்ந்த அருள்தாஸ் (வயது 45), எஸ்.பி.கோவில் தெரு ரவி(52), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேணுகோபால் (44) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர். அதில், பஸ்சில் இருக்கையில் அமர்வது தொடர்பாக இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வெங்கடாஜலபதியை 3 பேரும் சேர்ந்து மார்பு உள்ளிட்ட பகுதியில் அடித்து, சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தான், அவர் இறந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து அவர்களை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஓடும் பஸ்சில் தாக்கப்பட்ட மெக்கானிக் உயிரிழந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story