அரசு விதியை மீறி பயணிகளை ஏற்றிச்சென்ற 4 பஸ்களுக்கு அபராதம்


அரசு விதியை மீறி பயணிகளை ஏற்றிச்சென்ற 4 பஸ்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 9 July 2021 11:08 PM IST (Updated: 9 July 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே அரசு விதியை மீறி பயணிகளை ஏற்றிச்சென்ற 4 பஸ்களுக்கு தாசில்தார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

விழுப்புரம், 

கொரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் பஸ் போக்குவரத்து நடந்து வருகிறது. அதே சமயத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் 50 சதவீத பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் பஸ்களில் கடைபிடிக்கப்படுகிறதா? என்று நேற்று காலை விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் வினோத்குமார், கண்டமங்கலம் வருவாய் ஆய்வாளர் இளவரசி ஆகியோர் சாலைஅகரம், வளவனூர் குமாரகுப்பம், பாக்கம் கூட்டுசாலை ஆகிய இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

4 பஸ்களுக்கு அபராதம்

அப்போது விழுப்புரத்தில் இருந்து மதகடிப்பட்டு நோக்கிச்சென்ற அரசு பஸ், விழுப்புரத்தில் இருந்து வளவனூருக்கு புறப்பட்ட அரசு டவுன் பஸ் மற்றும் கடலூரில் இருந்து விழுப்புரம் வந்த தனியார் பஸ், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிச்சென்ற தனியார் பஸ் ஆகிய 4 பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் 4 பஸ்களிலும் அரசு விதிமுறையை மீறி அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் அமர்ந்து பயணம் செய்ததோடு மட்டுமின்றி இருக்கைகள் நிரம்பிய நிலையில் மேலும் சில பயணிகள் பஸ்சிற்குள் நின்றுகொண்டு பயணம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே கொரோனா பரவலுக்கு வழிவகுப்பதாக அமைந்ததால் 2 அரசு பஸ்களுக்கும் தலா ரூ.500 வீதம் அதன் போக்குவரத்துக்கழகத்திற்கு அதிகாரிகள் அபராதமாக விதித்தனர். அதுபோல் 2 தனியார் பஸ்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

டீக்கடை

மேலும் பாக்கம் கூட்டுசாலை பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் பொதுமக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் டீ குடித்து கொண்டிருந்ததை அறிந்த அதிகாரிகள், அந்த டீக்கடை உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். மிட்டா மண்டகப்பட்டு பகுதியில் உள்ள இருசக்கர வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் ஊழியர்கள் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பணியில் ஈடுபட்டனர். எனவே அந்த கம்பெனிக்கும் ரூ.500-ஐ அபராதமாக அதிகாரிகள் விதித்தனர்.

Next Story