மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் டயர் விற்பனை நிறுவன அதிபர் பலி
முத்தூர் அருகே மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் டயர் விற்பனை நிறுவன அதிபர் பலியானார். மேலும் தம்பதி காயம் அடைந்தனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது இந்த சம்பவம் நடந்து விட்டது.
முத்தூர்
முத்தூர் அருகே மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் டயர் விற்பனை நிறுவன அதிபர் பலியானார். மேலும் தம்பதி காயம் அடைந்தனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது இந்த சம்பவம் நடந்து விட்டது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
டயர் விற்பனை நிறுவன அதிபர்
ஈரோடு புதூரை அடுத்த அசோக்நகரை சேர்ந்தவர் பூபதி (வயது 45). இவர் ஈரோட்டில் டயர் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த டயர் விற்பனை நிறுவனத்தில் ஈரோட்டை சேர்ந்த திருமூர்த்தி (51), திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மார்க்கம்பட்டியை சேர்ந்த ஒருவரும் பங்கு தாரராக இருந்தனர். இந்த நிலையில் மார்க்கம்பட்டியை சேர்ந்த பங்குதாரர் நேற்று முன்தினம் இறந்து விட்டார்.
இதனை தொடர்ந்து அவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பூபதி, திருமூர்த்தி, திருமூர்த்தியின் மனைவி பத்மாவதி (42) ஆகியோர் ஒரு காரில் ஈரோட்டில் இருந்து மார்க்கம்பட்டிக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றனர். அங்கு இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு, நேற்று மதியம் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் நோக்கி வந்தனர். காரை திருமூர்த்தி ஓட்டினார். முன் இருக்கையில் பூபதி அமர்ந்து இருந்தார். காரின் பின் இருக்கையில் பத்மாவதி இருந்தார்.
இவர்களது கார் திருப்பூர் மாவட்டம் முத்தூர் - வெள்ளகோவில் பிரதான சாலையில் உள்ள வாய்க்கால்மேட்டுப்புதூர் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று மதியம் 1.30 மணிக்கு வந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்புற பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் மின்கம்பமும் 2 ஆக உடைந்து கீழே விழுந்தது. மேலும் மின்கம்பிகளும் அறுந்து கீழே விழுந்தன.
பலி
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த திருமூர்த்தி மற்றும் காரின் உள்ளே அமர்ந்து இருந்த அவரது மனைவி பத்மாவதி, காரின் முன்புறம் இடதுபுற பகுதியில் அமர்ந்து இருந்த பூபதி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து காருக்குள் இருந்த பூபதி, திருமூர்த்தி, பத்மாவதி ஆகிய 3 பேரையும் மீட்டு முத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பூபதியை பரிசோதனை செய்த டாக்டர், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் திருமூர்த்தி அவரது மனைவி பத்மாவதி ஆகிய இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பற்றிய தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீசார் விரைந்து வந்து பூபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின்கம்பத்தின் மீது கார் மோதிய வேகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மின் விபத்து ஏதும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து முத்தூர் மின்வாரிய ஊழியர்கள் மூலம் உடைந்த மின் கம்பம் அகற்றப்பட்டு புதிதாக மின் கம்பம் நடப்பட்டது. பின்னர் மின் கம்பத்தில் மின் கம்பிகள் இழுத்து கட்டப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story