அரசின் வழங்கப்படாத இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் எத்தனை


அரசின் வழங்கப்படாத இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் எத்தனை
x
தினத்தந்தி 9 July 2021 11:37 PM IST (Updated: 9 July 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது பொதுமக்களுக்கு வழங்காமல் வைக்கப்பட்டிருந்த அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் எத்தனை உள்ளன? என்று கணக்கீடு செய்து அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ‌.சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர்
கடந்த தி.மு.க. ஆட்சியின் போது பொதுமக்களுக்கு வழங்காமல் வைக்கப்பட்டிருந்த  அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் எத்தனை உள்ளன? என்று கணக்கீடு செய்து அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ‌.சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் ஆய்வு
கடந்த 2006-2011-ம் ஆண்டு தி.மு.க.ஆட்சியின்போது திருப்பூரை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வினியோகம் செய்யப்படாத தொலைக்காட்சி பெட்டிகள் அனைத்தும் திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பழனியம்மாள் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்  இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 
இந்த வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை  செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆய்வு செய்தார். 
கணக்கீடு 
இந்த ஆய்வு குறித்து அமைச்சர் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கடந்த 2006-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டபடி, பொதுமக்களுக்கு அரசின் சார்பில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டு வந்தன.
கடந்த 2011-ம் ஆண்டு அரசின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை திருப்பூர் நஞ்சப்பா பள்ளி, பழனியம்மாள் பள்ளியில் உள்ள வகுப்பறைகளில் வைக்கப்பட்டது. அப்போது சட்டமன்ற பொதுத்தேர்தலில் அறிவித்ததை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
அதற்கு பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படாமல் பள்ளி வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்  முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி இதுபோல் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படாமல்  வைக்கப்பட்டுள்ள  வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை கணக்கீடு செய்து, பயன்படுத்தக் கூடிய நிலையில் அவை இருக்கிறதா? என்று அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது  கலெக்டர் வினீத், ஆர்.டி.ஓ. ஜெகநாதன்,  தாசில்தார் ஜெகநாதன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story