வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்-நெல்லை கலெக்டர் விஷ்ணு அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் 3-வது அலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்படுகிறது என்று கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் 3-வது அலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்படுகிறது என்று கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார்.
விழிப்புணர்வு பிரசாரம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் உதவும் உள்ளங்கள் அமைப்பு இணைந்து கொேரானா நோய் பரவலின் 3-வது அலையை தடுக்க கிராமம் கிராமமாக சென்று நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். இதற்கான தொடக்க நிகழ்ச்சி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, பறையடித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வது, முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கிராமிய கலைஞர்களின் பொய்க்கால் குதிரை, தப்பாட்டம், கரகாட்டம் போன்ற நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னர் கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-
நோய் பரவல் குறைந்தது
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து, தற்போது 1.2 சதவீதமாக உள்ளது. கொரோனா 3-வது அலை வராமல் தடுக்க கிராமப்புற மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தொற்று பாதிப்பு அதிகம் கண்டறியும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அப்பகுதி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் 2-வது அலையில் இருந்ததைவிட தற்போது ஆஸ்பத்திரிகளில் அதிக எண்ணிக்கையில் படுக்கை வசதி தயார் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் 3-வது அலையைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.
கொரோனா பரிசோதனை
நெல்லை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்ட 10 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மீண்டும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இன்று (சனிக்கிழமை) முதல் நெல்லை மாவட்டத்துக்கு வருகிற வெளியூர் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை மாவட்டத்துக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story