மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 9 July 2021 6:33 PM GMT (Updated: 9 July 2021 6:33 PM GMT)

ஆனி அமாவாசையையொட்டி மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருப்புவனம்,

ஆனி அமாவாசையையொட்டி மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பத்ரகாளியம்மன் கோவில்

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தென்மாவட்ட அளவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும் மற்ற நாட்களில் அபிஷேக அலங்கார பூஜைகளும் நடைபெறும்.
நேர்த்திக்கடன் உள்ள பக்தர்கள் பத்ரகாளி அம்மனுக்கு எலுமிச்சம் பழம் மாலை, சேலைகள் சாத்தி வழிபடுவார்கள்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களாக பக்தர்கள் தரிசனம் செய்ய அரசு தடை விதித்திருந்தது. கடந்த 5-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அரசு அனுமதி அளித்து உள்ளது. அது முதல் தினமும் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் குவிந்தனர்

இந்த நிலையில், நேற்று ஆனி அமாவாசைையயொட்டி மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். முககவசம் அணிந்த பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். கிருமிநாசினி கைகளில் கழுவிய பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் சென்றனர்.
உச்சிக்கால பூஜையின் போது கோவிலுக்கு வெளியே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தரிசனம் முடிந்த பக்தர்கள் வடக்கு வாசல் வழியாக வெளியே அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்கு வெளியே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நெடுந்தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.பின்பு போக்குவரத்து நெரிசல் குறைந்து வாகனங்கள் மெதுவாக நகர்ந்து சென்றன. இதேபோல் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் கோவிலிலும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story