பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உதவி மையம்-போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உதவி மையம்-போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 July 2021 6:36 PM GMT (Updated: 9 July 2021 6:36 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உதவி மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தொடங்கி வைத்தார்.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உதவி மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தொடங்கி வைத்தார்.

உதவி மையம்

தென்காசி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதத்தில், ‘பெண்கள் உதவி மையம்’ என்ற திட்டம் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி, தென்காசியில் நேற்று நடந்தது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமை தாங்கி, புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். இதுகுறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

கட்டமில்லா தொலைபேசி எண்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களான வரதட்சணை கொடுமை, பாலியல் தொல்லை, பெண்களை மானபங்கபடுத்துதல், குழந்தை திருமணம், குழந்தைகளை தாக்குதல், குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தல் போன்றவற்றை தடுக்கும் விதத்தில் பெண்கள் உதவி மையம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக 1098 மற்றும் 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இந்த தொலைபேசி எண்கள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடப்பதாக புகார் பெறப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து அதற்காக நியமிக்கப்பட்ட பெண் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைவாக செய்து கொடுப்பார்கள்.

இதற்காக தென்காசி மாவட்டத்தில் 40 பெண் போலீசார் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு புதிதாக 20 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 20 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ, சைபர் கிரைம் கூடுதல் துணை சூப்பிரண்டு சுவாமிநாதன், தென்காசி துணை சூப்பிரண்டு மணிமாறன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story