டிரைவர் மர்ம சாவு: 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்


டிரைவர் மர்ம சாவு:  2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 July 2021 12:27 AM IST (Updated: 10 July 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

மர்மமாக இறந்த டிரைவர் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில்:

பனவடலிசத்திரம் அருகே ஜமீன் இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் திருமலைக்குமார் (வயது 27). பொக்லைன் எந்திர டிரைவரான இவர் நேற்று முன்தினம் அங்குள்ள கிணற்றின் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த திருமலைக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே திருமலைக்குமாரின் சாவுக்கு காரணமான உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள், சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக திருமலைக்குமாரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் ராம்குமார், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலிவரதன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர் உசேன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். திருமலைக்குமாரின் தாயாருக்கு ஓய்வூதியம், சகோதரிக்கு சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். தொடர்ந்து திருமலைக்குமாரின் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர்.

Next Story