அரசு கையகப்படுத்தும் முயற்சியை கைவிடக்கோரி 5 கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 10 July 2021 12:53 AM IST (Updated: 10 July 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

அரசு கையகப்படுத்தும் முயற்சியை கைவிடக்கோரி 5 கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

கரூர்
கரூர் மாவட்டம் கோடங்கிபட்டி, மணக்காட்டு நாயக்கனூர், கம்பளி நாயக்கனூர், கூனம நாயக்கனூர், காமாநாயக்கனூரை சேர்ந்த 5 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-
 கோடங்கிபட்டி உள்பட 5 ஊர்களிலும் 700 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் 5 ஊருக்கும் மாவத்தூர் கிராமத்தில் 5 குலதெய்வங்கள் மற்றும் சுடுகாடு உள்ளது. இந்த குல தெய்வங்களுக்கு கோவில் கட்டி குடமுழுக்கு செய்து வழிபட்டு வருகிறோம். இந்த இடத்தில் வருடத்தில் இருமுறை எங்கள் பாரம்பரியமான 14 மந்தையர்கள் 1,000-க்கும் மேற்பட்ட சாலை எருது சாமி மாடுகளுடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த இடத்தில் கூடி திருவிழா நடத்தி வருகிறோம். மேலும் சுடுகாட்டிற்கு வருடத்தில் ஒருமுறை பொங்கல் தினத்தன்று 3 நாட்கள் தங்கி திருவிழா உள்ளிட்ட சமுதாய நிகழ்ச்சிகளும் நடைபெறும். தற்சமயம் கால்நடை துறை மற்றும் வருவாய்த்துறையினர் கடந்த 8-ந்தேதியன்று கடவூர் வட்டாட்சியர் தலைமையில் நில அளவீடு செய்தனர். எதற்காக அளவீடு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு இந்த இடம் கால்நடை மேய்ச்சல் தரிசு நிலமாக உள்ளது. இந்த இடத்தை அளவீடு செய்து கால்நடை துறையிடம் ஒப்படைப்பதாக கூறினார்கள். மேற்படி இடத்தை எந்தவிதமான துறைக்கும் ஒப்படைக்காமல் சுடுகாட்டிற்காகவும், எங்கள் முன்னோர்களின் நினைவான நடுகல் வழிபாட்டிற்கும், வழக்கம்போல் திருவிழாக்களை நடத்தவும் எங்கள் பாரம்பரிய பண்பாடு கிராம நிகழ்ச்சிகள் நடைபெறவும் இடத்தை அரசு கையகப்படுத்தும் முயற்சியை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Next Story