தி.மு.க. ஆட்சியை பிடித்தால் உயிரை காணிக்கை செலுத்துவதாக வேண்டுதல்: கோவிலில் தீக்குளித்து தி.மு.க. தொண்டர் தற்கொலை
தி.மு.க. ஆட்சியை பிடித்தால் தனது உயிரை காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்ட தி.மு.க. தொண்டர் நேற்று கோவிலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
கரூர்
கோவிலில் தீக்குளித்து தற்கொலை
கரூர் மாவட்டம், லாலாபேட்டை பகுதியை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 60). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தி.மு.க.வின் தீவிர தொண்டரான இவர் நேற்று காலை 11 மணி அளவில் கரூர் அருகே மண்மங்கலத்தில் உள்ள புது காளியம்மன் கோவிலுக்கு பெட்ரோல் கேனுடன் வந்தார். கோவிலில் சாமி கும்பிட்ட அவர் சிறிது நேரம் கழித்து, தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் ஓடிவந்து உலகநாதன் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில், பலத்த தீக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தி.மு.க. ஆட்சியை பிடிக்க வேண்டிக் கொண்டவர்
இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உலகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், இந்த முறை சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடிக்க வேண்டியும், செந்தில்பாலாஜி கரூர் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரானால் தனது உயிரை காணிக்கையாக செலுத்துவதாக இக்கோவிலில் வேண்டிக் கொண்டதும், அவரது வேண்டுதல் நிறைவேறியதால் ஆனி அமாவாசையையொட்டி நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
உருக்கமாக கடிதம் சிக்கியது
இதுதொடர்பாக உலகநாதன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் எழுதி இருந்ததாவது:-
சட்டபேரவை தேர்தல் தேதி அறிவித்த உடனே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என எண்ணி இருந்தேன். கரூர் தொகுதியில் மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி வெற்றி வாகை சூடி அமைச்சராக வேண்டும் என மண்மங்கலம் காளியம்மன் கோவிலில் வேண்டுல் வைத்து இருந்தேன்.
மு.க.ஸ்டாலினை அ.தி.மு.க.வினர் தரம் தாழ்ந்த வார்த்தையில் பேசினர். இருந்தாலும், மக்கள் மனதை மாற்ற முடியாத நிலையில் தி.மு.க.வே வெற்றி பெற்றது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அறுதி பெருப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பதவி ஏற்றதை பார்த்த அண்ணியார் துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.
இறுதி ஆசை
பதவி ஏற்ற சமயத்தில் கொரோனா தொற்று 36 ஆயிரத்திற்கு மேல் இருந்தது. அதனால், தொற்று குறைந்து அனைவரும் நலமடைந்த பிறகு என் பிரார்த்தனையை நிறைவேற்றி கொள்ளலாம் என காலதாமதம் செய்து விட்டேன். நான் காளியின் அருள் பெற்றவன். நான் சொல்வது நடந்து கொண்டே இருக்கும். நான் செய்யும் பிரார்த்தனை நிறைவேறியதால் சுய நினைவுடன் இறப்பை தேடுகிறேன்.
மேலும், எனது 2-வது மகன் விழுப்புரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். அவரை கரூர் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்து அமைச்சர் நேரடி பார்வையில் வைத்து கொள்ளுங்கள். அதுவே எனது இறுதி ஆசை. என் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது. உலகநாதன் தற்கொலை சம்பவம் தி.மு.க.வினர் மற்றும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story