தஞ்சை தலையாட்டி பொம்மையை வடிவமைத்து வரும் கும்பகோணம் சிற்ப கலைஞர்
10 அடி உயரத்திற்கு தஞ்சை தலையாட்டி பொம்மையை கும்பகோணம் சிற்ப கலைஞர் வடிவமைத்துள்ளார்.
கும்பகோணம்:
10 அடி உயரத்திற்கு தஞ்சை தலையாட்டி பொம்மையை கும்பகோணம் சிற்ப கலைஞர் வடிவமைத்துள்ளார்.
தலையாட்டி பொம்மை
தஞ்சை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பெரியகோவில் மற்றும் தலையாட்டி பொம்மை. இங்கு தயாரிக்கப்படும் பொம்மைக்கு புவிசார் குறியீட்டும் பெறப்பட்டு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.
வீடுகள், நிறுவனங்களில் வரவேற்பு அறைகளில் அலங்கரித்து கொண்டிருந்த ½ உயரம் கொண்ட தலையாட்டி பொம்மைகளை 10 அடி உயரத்துக்கு வடிவமைத்து மாவட்ட நிர்வாகம் அதனை தஞ்சை மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் வைத்து வரவேற்கும் பொம்மைகளாக மாற்றியுள்ளது.
ராஜா, ராணி
கும்பகோணம் சுவாமிமலை பகுதியில் 10 அடி உயரம் கொண்ட தலையாட்டி பொம்மை செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை தலையாட்டி பொம்மையில் ராஜா, ராணி ஆகிய இரண்டு உள்ளது. இந்த இரண்டு பொம்மைகளின் இருபுறமும் ராஜாவும், ராணியும் தற்போது மழை, வெயில் அடித்தாலும், வர்ணம் மாறாமல் இருக்குமாறு பைபரால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பொம்மைகளை சிற்பக்கலைஞர் ஒருவர் செய்து வருகிறார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதலில் இந்த பெரிய அளவு தலையாட்டி பொம்மை வைக்கப்பட்டிருந்ததை பார்த்த பல்வேறு தொழில் நிறுவனங்கள், இதே போன்று வடிவமைத்து தங்களது நிறுவனங்கள் வாயில் முன்பு வைத்து வருகின்றனர்.
கொரோனா விழிப்புணர்வு
மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இந்த பெரிய அளவு தலையாட்டி பொம்மைகளில் " நோ மாஸ்க், நோ என்ட்ரி" என வாசகத்தை மாவட்ட நிர்வாகம் அணிவித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சிற்ப கலைஞர் துரை.ராஜாபீர்பால் கூறுகையில்,
எனது சொந்த ஊர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே உள்ள எளமனூர். நான் கவின் கலைக்கல்லூரியில் சிற்ப துறையில் படித்துவிட்டு சுவாமிமலையில் வசித்து வருகிறேன். நான் சிலைகள், பெரிய அளவிலான பொம்மைகள் ஆகியவவைற செய்து வருகிறேன்.
வீட்டு அலமாரி பொருள்
கடந்த மகாமக திருவிழாவின் போது கும்பகோணம் அரசலாற்றின் பாலக்கரையில் சாலையின் இருபுறமும் யானை பொம்மைகளை தயாரித்து வைத்துள்ளேன். அதே போல் தஞ்சை அரண்மனை வாயிற்பகுதி, தஞ்சை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் யானை பொம்மைகளை தயாரித்து அமைத்துள்ளேன்.
தஞ்சை தலையாட்டி பொம்மை பலரது வீட்டில் அலமாரியில் அலங்கார பொருளாக தான் பார்க்க முடிகிறது. இதை ஏன் பொதுமக்கள் பார்வையில் படும் படி வைக்கக்கூடாது என எண்ணி பெரிய அளவில் பொம்மை தயாரிக்க முடிவு செய்து 10 அடி உயரம் கொண்ட பொம்மையை தயாரித்தேன். அதை முன்னாள் கலெக்டர் கோவிந்தராவிடம் காண்பித்தேன்.
இந்த பொம்மையை பார்த்து நன்றாக இருக்கிறது என்று கூறியதுடன் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் வைக்க 10 பொம்மைகளை செய்து தர கூறியதை தொடர்ந்து செய்து கொடுத்தேன். தற்போது இந்த பொம்மைகளை பார்த்துவிட்டு பலரும் பெட்ரோல் பங்க் மற்றும் தனியார் நிறுவனங்களில் வரவேற்பு பொம்மையாக வைக்க விரும்பி அனுகியுள்ளனர். வரவேற்பு அறையில் ½ அடியில் முடங்கி கிடந்த இந்த தஞ்சை தலையாட்டி பொம்மைகளை தற்போது, பிரமாண்டமாய் தயாரித்து, தஞ்சை தலையாட்டி பொம்மைக்கு உயிர் கொடுத்து வருகிறேன் என்றார்.
Related Tags :
Next Story