பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் 20-ந் தேதிக்குள் வெளியீடு


மந்திரி சுரேஷ்குமார்.
x
மந்திரி சுரேஷ்குமார்.
தினத்தந்தி 10 July 2021 2:13 AM IST (Updated: 10 July 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் வருகிற 20-ந் தேதிக்குள் வெளியிடப்படும் என்று மந்திரி சுரேஷ்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் வருகிற 20-ந் தேதிக்குள் வெளியிடப்படும் என்று மந்திரி சுரேஷ்குமார் கூறியுள்ளார்.

மாணவர்களுடன் கலந்துரையாடிய மந்திரி

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2020-2021-ம் கல்வி ஆண்டில் பி.யூ.சி. கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வுகளை அரசு ரத்து செய்தது. மேலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவித்த அரசு எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

ஆனால் 10-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்படி வருகிற 19, 22-ந் தேதிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் நேற்று பள்ளிகல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

இணையதள வசதி

இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத பதிவு செய்து உள்ள அனைத்து மாணவர்களும், பி.யூ.சி. வகுப்பில் நுழைய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. மாநிலத்தில் அரசு கல்லூரிகளில் பி.யூ.சி. இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் கல்லூரிகளிடம் இருந்து இடம் கேட்கப்பட்டால் அவர்களுக்கும் வழங்கப்படும்.

மலைகிராமங்களில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்க சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு இணையதள வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புறங்களில் இணையதள வசதியை வலுப்படுத்த இணைய சேவை வழங்குபவர்களுடன், முதல்-மந்திரி விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு விகிதம் 13.2 ஆக இருந்தது. இந்த ஆண்டு 1.7 சதவீதமாக உள்ளது. 10-ம் வகுப்பு தேர்வு பாதுகாப்பான சூழ்நிலையில் நடத்தப்படும்.

தடுப்பூசி

தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்படும் 1,33,926 ஆசிரியர்களில், 1 லட்சத்து 30 ஆயிரத்து 522 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டனர். 48 ஆயிரத்து 938 பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். மீதம் உள்ளவர்களும் தேர்வு தொடங்குவதற்குள் தடுப்பூசி செலுத்தி விடுவார்கள். பி.யூ.சி. கல்லூரி தேர்வு முடிவுகள் இந்த மாதம் 20-ந் தேதிக்குள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story