கர்நாடக கவர்னராக தாவர்சந்த் கெலாட் நாளை பதவி ஏற்பு
பெங்களூரு ராஜ்பவனில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் விழாவில் கர்நாடகத்தின் 19-வது கவர்னராக தாவர்சந்த் கெலாட் பதவி ஏற்கிறார்.
பெங்களூரு: பெங்களூரு ராஜ்பவனில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் விழாவில் கர்நாடகத்தின் 19-வது கவர்னராக தாவர்சந்த் கெலாட் பதவி ஏற்கிறார்.
மத்திய அரசிடம் கோரிக்கை
கர்நாடக கவர்னராக பணியாற்றி வருபவர் வஜூபாய் வாலா (வயது 83). குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கவர்னராக பணியாற்றி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் அவர் 5 ஆண்டுகளை நிறைவு செய்து இருந்தார். இந்த நிலையில் அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வஜூபாய் வாலா தன்னை கவர்னர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
ஆனாலும் கர்நாடகத்தில் நடந்த ஆட்சி மாற்றம், நிர்வாக வசதிகளுக்காக வஜூபாய் வாலாவை மத்திய அரசு மாற்றாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு (2020) செப்டம்பர் மாதம் வஜூபாய் வாலா தனது பதவியில் 6 ஆண்டுகளை நிறைவு செய்து இருந்தார். இந்த நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் வந்தால் வஜூபாய் வாலா கவர்னராக பதவியேற்று 7 ஆண்டுகள் ஆக இருந்தது.
கெலாட் நாளை பதவி ஏற்பு
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி கர்நாடகம் உள்பட சில மாநிலங்களுக்கு ஜனாதிபதி புதிய கவர்னரை நியமித்தார். அதன்படி கர்நாடக கவர்னராக மோடியின் மத்திய மந்திரிசபையில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரியாக பணியாற்றிய தாவர்சந்த் கெலாட் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். கவர்னராக நியமிக்கப்பட்டதால் தாவர்சந்த் கெலாட் தனது மாநிலங்களவை எம்.பி. பதவியையும், மத்திய மந்திரி பதவியையும் ராஜினாமா செய்து இருந்தார்.
இந்த நிலையில் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ள தாவர்சந்த் கெலாட் 11-ந் தேதி (அதாவது நாளை) பதவி ஏற்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் வைத்து கர்நாடக மாநிலத்தின் 19-வது கவர்னராக தாவர்சந்த் கெலாட் பதவி ஏற்கிறார்.
வஜூபாய் வாலா விடை பெறுகிறார்
இந்த பதவியேற்பு விழா காலை 10.30 மணிக்கு நடக்க உள்ளது. புதிய கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா பதவி பிராமணமும், ரகசிய காப்பு பிராமணமும் செய்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கவர்னர் மாளிகை அதிகாரிகள் செய்து வருகின்றனர். புதிய கவர்னரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு வஜூபாய் வாலா விடைபெற உள்ளார்.
Related Tags :
Next Story