மதகை சீரமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன போராட்டம்
தா.பழூர் அருகே இடியும் நிலையில் உள்ள மதகை சீரமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன போராட்டம் நடைபெற்றது.
தா.பழூர்:
தண்ணீர் திறப்பு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. டெல்டா பாசன பகுதியான தா.பழூர் விவசாய நிலங்களுக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து பொன்னார் பிரதான பாசன வாய்க்கால் மூலம் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் கீழணை பகுதிக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து சமீபத்தில் தூர்வாரப்பட்ட பொன்னார் பிரதான வாய்க்காலில் குருவாடி தலைப்பு பகுதியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
சேற்று மண் கலவையை பூசினர்
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சோழமாதேவி ஊராட்சி குறிச்சி கிராமத்தில் உள்ள 4-ம் எண் கிளை பாசன வாய்க்கால் மதகு மற்றும் அதன் சுற்றுச்சுவர்கள், தடுப்பு சுவர்கள் பழுதடைந்து மிகவும் பலவீனமாக உள்ளன. எனவே இந்த மதகை தண்ணீர் வருவதற்குள் சீரமைத்து அல்லது புதிதாக கட்டித்தர வேண்டும் என்று அரசுக்கு இப்பகுதி விவசாயிகள், அதிகாரிகள் மூலமாக கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் மதகை சீரமைக்கும் பணி குறித்து இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் மதகு சரி செய்யப்படாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அப்பகுதி இளைஞர்கள் நேற்று ஒன்று திரண்டு, விவசாயிகளுடன் இணைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மண்சட்டியில் சேற்று மண்ணை எடுத்து வந்து, பழுதடைந்த மதகில் விரிசல் உள்ள இடங்களில் மண் கலவையை பூசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை
இதுகுறித்து இளைஞர்கள் கூறுகையில், பழுதடைந்த மதகு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. 4-ம் எண் கிளை வாய்க்காலின் மூலம் பாசனம் பெறும் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்படும் சம்பா நெல் சாகுபடி முற்றிலும் அழியும் ஆபத்து உள்ளது. இதன் காரணமாக விவசாயிகளின் உழைப்பு வீணாகும். எனவே உடனடியாக ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழுதடைந்த மதகை அரசு அகற்றிவிட்டு, புதிய மதகு அமைத்து தர வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story