பழங்கால வடிகால் அமைப்பு போன்ற சுவர்கள் கண்டுபிடிப்பு
மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் பழங்கால வடிகால் அமைப்பு போன்ற சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீன்சுருட்டி:
அகழாய்வு பணி
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை கிராமத்தில் உள்ள மாளிகைமேடு பகுதியில் தொல்லியல் துறை மூலம் கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்றன. இதில் பழங்கால கூரை ஓடுகள், பானை ஓடுகள், இரும்பினாலான ஆணி, சீன கலை நயமிக்க மணிகள் போன்ற பொருட்கள் கிடைத்தன. அவற்றை தொல்லியல் துறையினர் சேகரித்து வைத்துள்ளனர்.
அதேபோல் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவர் தென்பட்டது. இந்நிலையில் கொரோனா 2-வது அலை ஊரடங்கு காரணமாக அகழாய்வு பணிகள் கடந்த மாதம் நிறுத்தப்பட்டது.
வடிகால் அமைப்பு போன்று...
பின்னர் ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கின. இதைத்தொடர்ந்து நடந்த அகழாய்வு பணியில் அரண்மனையின் தொடர்ச்சியாக 2-வது பாகமும் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று நடந்த அகழாய்வு பணியின்போது, பழங்கால வடிகால் அமைப்பு போன்ற சுவர்கள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பானை விளிம்பும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அரண்மனையின் மற்ற பாகங்கள்
இது குறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் மாளிகைமேடு பகுதியில்தான் அரண்மனை அமைத்து இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அந்த வகையில் அரண்மனையின் 2-வது பாகத்தை தொடர்ந்து, தற்போது வடிகால் அமைப்பு போன்ற சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சுவர்கள் எந்த மாதிரியானவை என்பது முழு ஆய்வுக்கு பிறகே தெரியவரும். இவை சோழர்களின் வரலாற்று சுவடுகளை உறுதி செய்கின்றன. இன்னும் சில மாதங்களில் அரண்மனையின் மற்ற பாகங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் சோழர்களின் வரலாற்று அரிய பொக்கிஷங்கள், இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக, தெரிவித்தனர்.
Related Tags :
Next Story