தனிக்குடித்தனம் செல்ல கட்டாயப்படுத்தியதால் ஆத்திரம்: மனைவியை தலையணையால் அமுக்கி கொன்ற பேக்கரி உரிமையாளர் கைது


தனிக்குடித்தனம் செல்ல கட்டாயப்படுத்தியதால் ஆத்திரம்: மனைவியை தலையணையால் அமுக்கி கொன்ற  பேக்கரி உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 10 July 2021 4:17 AM IST (Updated: 10 July 2021 4:17 AM IST)
t-max-icont-min-icon

தனிக்குடித்தனம் செல்ல கட்டாயப்படுத்தியதால் ஆத்திரம்: மனைவியை தலையணையால் அமுக்கி கொன்ற பேக்கரி உரிமையாளர் கைது

பரமத்திவேலூர்:
தனிக்குடித்தனம் செல்ல கட்டாயப்படுத்தியதால் ஆத்திரமடைந்து மனைவியை தலையணையால் அமுக்கி கொலை செய்த பேக்கரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
பேக்கரி கடை
நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் பாப்பாத்தியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மகன் கபிலேஷ்ராஜன் (வயது 27). இவருக்கும் திருப்பூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே மடத்துக்குளத்தை சேர்ந்த சீனிவாசன் மகள் சர்மிளாதேவிக்கும் கடந்த ‌1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் தங்களது 8 மாத குழந்தை சஜாஜோனிகாவுடன் பொத்தனூரில் தாய் சுசீலா, சகோதரியுடன் வசித்து வந்தனர். கபிலேஷ்ராஜன் கரூரில் பேக்கரி நடத்தி வந்தார். 
இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி கையில் காயங்களுடன் மயங்கி கிடந்த சர்மிளாதேவியை கபிலேஷ்ராஜனின் தாய் சுசீலா மீட்டு பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், சர்மிளாதேவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சீனிவாசன் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். அதன்பேரில் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் கபிலேஷ்ராஜனை பிடித்து விசாரணை நடத்தினார். 
தனிக்குடித்தனம்
இந்தநிலையில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் கணவன், மனைவி இடையே கடந்த 4 மாதங்களாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததும், இதனால் சர்மிளாதேவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து கபிலேஷ்ராஜன் கடந்த மாதம் 26-ந் தேதி சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார். 
இந்தநிலையில்  கடந்த 5-ந் தேதி கரூரில் உள்ள பேக்கரிக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தபோது சர்மிளாதேவி தனிக்குடித்தனம் போக வேண்டும் என கூறி கட்டாயப்படுத்தினார். ஆனால் தந்தை இல்லாததால் தாயும், சகோதரியும் தனியாக இருப்பதால் தனிக்குடித்தனம் செல்ல முடியாது என கபிலேஷ்ராஜன் கூறினார். இதனால் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கபிேலஷ்ராஜன் மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார்.
கொன்றார்
அதன்படி சம்பவத்தன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த சர்மிளாதேவியை தலையணையால் முகத்தில் வைத்து அமுக்கி கொன்றது தெரியவந்தது. பின்னர் கத்தியை எடுத்து மனைவியின் இடது மணிக்கட்டில் கையை அறுத்துவிட்டு உடலை படுக்கை அறையில் போட்டுள்ளார். பின்னர் மனைவியின் செல்போனை எடுத்து தனிக்குடித்தனம் போகவில்லை என்றால் நான் செத்துவிடுவேன் என்று அவரே டைப் செய்து அதை தனது செல்போனுக்கு அனுப்பி விட்டு, கரூருக்கு சென்று விட்டார். 
கைது
பின்னர் சுசீலா, மருமகள் கீழே வராததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் சந்தேகமடைந்த அவர் மேலே சென்று பார்த்தபோது ரத்தக்காயங்களுடன் சர்மிளாதேவி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கபிலேஷ்ராஜனை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story