வீட்டை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம்
கூடலூர் அருகே வீட்டை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் செய்தது. இதில் தொழிலாளி குடும்பத்துடன் உயிர் தப்பினார்.
கூடலூர்
கூடலூர் அருகே வீட்டை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் செய்தது. இதில் தொழிலாளி குடும்பத்துடன் உயிர் தப்பினார்.
அட்டகாசம்
கூடலூர், பந்தலூர் தாலுகாவில் அடிக்கடி காட்டுயானைகள் ஊருக்குள் வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரோட்டுப்பாறை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டுயானை புகுந்தது. தொடர்ந்து பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டது.
இதனால் அவர்கள் பீதி அடைந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி சதாசிவம் என்பவரது வீட்டின் பின்பக்கம் உள்ள சமையலறையை காட்டுயானை உடைத்து அட்டகாசம் செய்தது. மேலும் அங்கு வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை தின்றது. மேலும் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியது.
அதிர்ச்சி
இந்த சத்தம் கேட்டு முன்பக்க அறையில் தூங்கி கொண்டு இருந்த சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் எழுந்து, சமையல் அறை நோக்கி வந்தனர். அப்போது காட்டுயானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் கூச்சலிட்டனர். பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து காட்டுயானையை விரட்டியடித்தனர்.
இதனால் தொழிலாளி குடும்பத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காட்டுயானை ஊருக்குள் வந்தது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் உரிய நேரத்தில் வராததால் காட்டுயானை வீட்டை சேதப்படுத்திவிட்டது என்றனர்.
இழப்பீடு
இதையடுத்து சேதமடைந்த தொழிலாளி வீட்டை வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது சேதமடைந்த வீடு மற்றும் பொருட்களுக்கான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் காட்டுயானை மீண்டும் வராமல் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story