மின் இணைப்பு பெற்று தருவதாக ஐ.டி. நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி
புதிதாக கட்டி வரும் ஓட்டலுக்கு மின் இணைப்பு பெற்று தருவதாக கூறி ஐ.டி. நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஐ.டி. நிறுவன ஊழியர்
சென்னை நெற்குன்றத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சம்ஷிதா (வயது 42). ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், திருச்சியில் புதிதாக ஓட்டல் ஒன்றை கட்டி வருகிறார். அந்த ஓட்டலுக்கு அங்குள்ள தனது நண்பர் மூலமாக மின் இணைப்பு வாங்கித் தருவதாக குரோம்பேட்டையை சேர்ந்த சுதர்சன் என்பவர் கூறினார். அதை நம்பிய சம்ஷிதாவும் அவரிடம் 3 தவணையாக ரூ.9 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது.
கைது
ஆனால் சுதர்சன் சொன்னபடி ஓட்டலுக்கு மின் இணைப்பு பெற்று தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி சம்ஷிதா கேட்டார். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றினார். இந்த மோசடி தொடர்பாக சம்ஷிதா கொடுத்த புகாரின்பேரில் ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதர்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story