திறக்கப்பட்டு 5 நாட்களாகியும் வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு குறைந்த எண்ணிக்கையில் வரும் பக்தர்கள்
திறக்கப்பட்டு 5 நாட்களாகியும் வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து நகர்' என அழைக்கப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்திற்கு விடுமுறை நாட்களில் தமிழகத்தில் பல்வேறுமாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகளும் வந்து செல்வார்கள்.
இந்த நிலையில் கொரோனா தொற்று 2-வது அலை மிக தீவிரமாக பரவி வந்ததால் தமிழகத்தில் ஆலயங்களில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள், மத கூட்டங்கள் மற்றும் கடற்கரையில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி காலை 6 மணி வரை ஆலயங்களில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா தொற்று குறைந்ததால் ஒரு சில தளர்வுகளுடன் வருகிற 12 -ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கடந்த 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பஸ் போக்குவரத்தும் தொடங்கியது.
அதன்படி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் வருகின்றனர். இதனால் பேராலய வளாகம் மற்றும் கடற்கரையில் பக்தர்களின் கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது. கடல் சீற்றத்தினால் கடற்கரையில் உள்ள மணல் அரிக்கப்பட்டுள்ளதால் கரையில் சுற்றுலா பயணிகள் நின்று கடலின் அழகை ரசிக்க முடியவில்லை.
ஓட்டல்கள், அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், முடி எடுக்கும் கடைகள். பூ கடைகள். மெழுகுவர்த்தி கடைகளில் ஒரு சில வாடிக்கையாளர்களே இருந்தனர்.
மேலும் பொரி, பட்டானி கடைகள் உள்ளிட்டவைகள் வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.
Related Tags :
Next Story