சீர்காழியில் உள்ள அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் லலிதா தகவல்
சீர்காழியில் உள்ள அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு இசைப்பள்ளி இயங்கி வருகிறது. தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் இந்த இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் 3 ஆண்டுகள் முழு நேர பயிற்சி அளிக்கப்பட்டு, தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு விதிகளின்படி இலவச விடுதி வசதி, அரசு கல்வி உதவித்தொகை, பஸ் கட்டண சலுகைகள் மற்றும் மாதந்தோறும் கல்வி ஊக்க தொகை ரூ.400 வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இசைப்பள்ளியில் 2021-2022-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் சேர ஆண் மற்றும் பெண் இருபாலரும் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 12 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆண்டு ஒன்றுக்கு கல்வி கட்டணமாக ரூ.152 செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு சீர்காழி மாவட்ட அரசு இசைப்பள்ளி, தலைமை ஆசிரியரை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story