விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு: குழிக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம் கெலமங்கலம் அருகே பரபரப்பு
விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை தொடர விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து குழிக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராயக்கோட்டை:
விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை தொடர விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து குழிக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எரிவாயு குழாய்
கேரள மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே குந்துமாரனப்பள்ளி பகுதியில் கெயில் நிறுவனம் நேற்று முதல் பணிகளை மேற்கொண்டது.
குந்துமாரனப்பள்ளி கிராமம் அருகில் கெயில் நிறுவன துணை மேலாளர் சங்கர் தலைமையில் ஏற்கனவே தோண்டப்பட்டு குழாய்கள் பதித்து மூடப்படாமல் இருந்த குழிகளை மூடும் பணிகள் நடந்து வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குபேரன் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்த குழிக்குள் இறங்கி பணிகளை நிறுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை தாசில்தார் இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அவர்களிடம் பேசிய தாசில்தார் இளங்கோ, தற்போது பருவமழை தொடங்கி விட்டது. இந்த குழிகளுக்குள் நீர் நிரம்பினால், கால்நடைகளுக்கோ, அல்லது மனித உயிர்களுக்கோ அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் குழிகளை மூட மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வாக்குறுதி
அப்போது விவசாயிகள் கூறுகையில், முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் கெயில் திட்டம் தொடர்பாக விவசாயிகள் மற்றும் கெயில் நிறுவனம் என இரு தரப்பினரையும் அழைத்து பேசி சுமூகமான உடன்பாடு ஏற்பட்ட பிறகே இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
மேலும் கடந்த 15.4.21-ந் தேதி கிருஷ்ணகிரி கலெக்டரை நேரில் சந்தித்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்துள்ளோம். இதனால் கலெக்டர் தற்காலிகமாக பணிகளை நிறுத்தி வைக்குமாறும், மீண்டும் பணிகளை தொடங்கும் முன்பு விவசாயிகள் மற்றும் கெயில் நிறுவனத்தை அழைத்து பேசி சுமூக முடிவு எட்டப்பட்ட பிறகே பணிகளை தொடருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் தற்போது தங்களை அழைத்து பேசாமலேயே பணிகளை தொடங்கி உள்ளனர் என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
இந்த நிலையில் அதிகாரிகள்-விவசாயிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இது தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) கிருஷ்ணகிரி கலெக்டரை நேரில் சந்தித்து பேச உள்ளதாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவித்தனர். மேலும் பணிகளை தொடர்ந்தால் போராட்டம் நடத்த போவதாக அவர்கள் கூறி கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
---
Related Tags :
Next Story