அடுத்தடுத்து 6 பேரிடம் செல்போன்கள் பறித்த வாலிபர் கைது
மடத்துக்குளத்தில் அடுத்தடுத்து 6 பேரிடம் செல்போன்கள் பறித்த வாலிபரை போலீசார் 24 மணி நேரத்துக்குள் கைது செய்துள்ளனர்.
போடிப்பட்டி
மடத்துக்குளத்தில் அடுத்தடுத்து 6 பேரிடம் செல்போன்கள் பறித்த வாலிபரை போலீசார் 24 மணி நேரத்துக்குள் கைது செய்துள்ளனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செல்போன் பறிப்பு
மடத்துக்குளத்தை அடுத்த சோழமாதேவி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவர் உடுமலை தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பழனி சாலையில் ஒரு மில் அருகே மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் கார்த்திக் அருகில் வந்தததும், மற்றொரு மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் இருந்த வாலிபர் கார்த்திக்கின் செல்போனை பறித்து தப்பிச்சென்று விட்டனர்.
இதுபோல் மடத்துக்குளம்-கணியூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சோழமாதேவியை சேர்ந்த நாகூர் மீரான் (41) என்பவரிடமிருந்தும் செல்போனை மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் பறித்து சென்றனர்.. மேலும் சில மணி நேரங்களில் தொடர்ச்சியாக மடத்துக்குளத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம், முத்துக்குமார், பழனிச்சாமி மற்றும் கே.கே.புதூரை சேர்ந்த செல்வராஜ் ஆகியோரிடமும் இதே பாணியில் செல்போன் பறிக்கப்பட்டிருக்கிறது.இதுகுறித்து கார்த்திக், நாகூர் மீரான் ஆகியோர் மடத்துக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
வாலிபர் கைது
செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட ஆசாமிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் மேற்பார்வையில் மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி, உடுமலை இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் குதிரையாறு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்துவிசாரித்தனர். விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக்ராஜா (19) என்பதும், மின் வாரியத்தில் ஒப்பந்தப்பணியாளராகப் பணியாற்றி வந்ததும், கார்த்திக், நாகூர் மீரான் உள்பட 6பேரிடம் செல்போன்களை பறித்து சென்றதும் தெரியவந்தது.
இதைடுத்து கார்த்திக்ராஜாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இவருடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட மற்றொருவரான பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மகாமுனி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். செல்போன்கள் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவரை 24 மணி நேரத்துக்குள் பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story